search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலிகிராமத்தில் தொழில் அதிபரிடம் வழிப்பறி- 2 திருநங்கைகள் கைவரிசை
    X

    சாலிகிராமத்தில் தொழில் அதிபரிடம் வழிப்பறி- 2 திருநங்கைகள் கைவரிசை

    சென்னை சாலிகிராமத்தில் தொழில் அதிபரிடம் ரூ.54 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்ற 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை சாலிகிராமம் தனலட்சுமி காலனியை சேர்ந்தவர் டேவிட் பால்ராஜ். தொழில் அதிபர். இவர் வங்கியில் இருந்து ரூ.7 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் வந்தார்.

    குமரன் காலனி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று காரில் புறப்பட்ட போது 2 திருநங்கைகள் அங்கு வந்தனர்.

    அவர்கள் டேவிட் பால்ராஜிடம் ஆசிர்வாதம் செய்வதாக கூறினர். உடனே டேவிட் பால்ராஜ் திருநங்கையிடம் ரூ.50 கொடுத்தார். அப்போது காரில் இருந்த பணப்பையையும் தொட்டு ஆசிர்வாதம் செய்வதாக திருநங்கைகள் கூறினர்.

    இதை நம்பிய டேவிட் பால்ராஜ் பணப்பையை எடுத்து கொடுத்தவுடன் அவரது கவனத்தை திசை திருப்பி அதில் இருந்த ரூ.54 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு 2 திருநங்கைகளும் ஓடி விட்டனர்.

    இதுகுறித்து டேவிட் பால்ராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருநங்கைகளான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சல்மா என்கிற அலினா, சூளை சாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த சுமித்ரா என்பது தெரிந்தது. அவர்களை விருகம்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர்.

    கைதான இருவரும் வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பணம் 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×