search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை
    X

    கவர்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை

    ஆளுநரின் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாகவே எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சிப்பதும், எதிர்ப்பதும் மட்டுமல்ல பல்வேறு நிலைகளிலே ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிருப்தியை தெரிவிப்பதும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

    ஆனாலும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் சம்பந்தமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே தமிழக ஆளுநரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக சென்றதிலும், துணை வேந்தர் லஞ்சம் பெற்றது தொடர்பான நடவடிக்கையிலும், துணை வேந்தரை நியமனம் செய்ததிலும், அதனைத் தொடர்ந்து இப்போது அருப்புக்கோட்டை துணை பேராசிரியையின் குற்றச்செயல் மீதான அவசர நடவடிக்கையாக ஒரு நபர் விசாரணை கமி‌ஷனுக்கு உத்தரவிட்டதிலும், இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையும் ஆளுநருக்கு எதிராகவே அமைந்துள்ளது.

    இவ்வாறு ஆளுநர் தெளிவற்ற, அவசரமான தனது தொடர் செயல்பாட்டால் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டிருக்கிறார். இவை எல்லாம் பொது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நல்ல நிகழ்வாக அமையவில்லை.

    மேலும் ஆளுநரின் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிர் கட்சிகளுக்கு எதிராகவோ அமைந்துவிடாமல் பொது மக்கள் நலன் காக்கும் விதத்திலும், மாநில முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையிலும் அமைய வேண்டும்.

    எனவே தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாட்டின் காரணமாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளை மத்திய பா.ஜ.க. அரசு முக்கியமானதாக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×