search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணத்தில் விவசாயி கொலை - மனைவி உள்பட 3 பேர் கைது
    X

    மரக்காணத்தில் விவசாயி கொலை - மனைவி உள்பட 3 பேர் கைது

    மரக்காணத்தில் விவசாயி அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). இவரது மனைவி மைதிலி (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மரக்காணம் அருகே குரும்புரம் சாலையோரத்தில் நேற்று அதிகாலை பெரியசாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு பெரியசாமியின் வீட்டுக்கு சென்று நின்றது. அங்கிருந்த பெரியசாமியின் மனைவி மைதிலியை சுற்றி சுற்றி வந்தது.

    இதையடுத்து மைதிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மைதிலியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மரக்காணம் அருகே ஆலத்தூரில் உள்ளது. அந்த பண்ணை வீட்டில்தான் நானும், எனது கணவர் பெரியசாமியும் வேலை செய்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களாக எனது நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் தினமும் மது குடித்து வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இது குறித்து செஞ்சி அனந்தபுரம் அருகே உள்ள சங்கீதாமங்கலத்தில் உள்ள எனது தாய் மலர், தம்பி சிரஞ்சீவி ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் இங்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவும் எனது கணவர் பெரியசாமி மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கினார்.

    இதைப்பார்த்த எனது தம்பி சிரஞ்சீவி, இதனை தடுக்க முயன்றான். எனது தம்பியையும் அவர் தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த எனது தம்பி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அவரை தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உடனே நான் எனது தம்பி சிரஞ்சீவி, தாய் மலர் ஆகிய 3 பேரும் சேர்ந்து காரில் எனது கணவரின் உடலை ஏற்றி சென்று மரக்காணம் அருகே உள்ள குரும்புரம் சாலையோரத்தில் வீசி விட்டு வந்து விட்டோம். போலீஸ் நாய் மோப்பம் பிடித்து எங்களை காட்டி கொடுத்து விட்டது. இதனால் நாங்கள் மாட்டிக்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து மைதிலி, அவரது தாய் மலர் (55), தம்பி சிரஞ்சீவி (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×