search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்.
    X
    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்.

    மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

    போலீசார் பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து 5 பெண்கள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 27 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பங்கேற்கும் இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் இன்று நடை பெற்றது.

    கூட்டம் முடிந்ததும் கட்டுமானப்பணிகள் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 5 பெண்கள் வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கேன்கள் மற்றும் பாட்டில்களில் இருந்த மண்எண்ணையை தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்களும், அமைச்சரின் பாதுகாப்பு போலீசாரும் விரைந்து செயல்பட்டு அந்த பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். இருப்பினும் 5 பெண்களும் தரையில் உருண்டு போலீசாரை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.


    அவர்களை தல்லாகுளம் போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    மதுரை ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்த கவாத்து திருப்பதி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. அவர் தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாகி விட்டார். இந்த கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கேரளாவில் தங்கி இருந்த கவாத்து திருப்பதி, அவனது கூட்டாளிகள் பாண்டியராஜன், பிரேம், மணி, மொட்டை மணி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் கவாத்து திருப்பதியின் உறவினர்கள் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்து விட்டனர்.

    போலீசார் தங்கள் மகன்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து தான் கவாத்து திருப்பதியின் தாய் ஈஸ்வரி, சகோதரிகள் ஆறுமுகத்தாய், லட்சுமி, உறவினர்கள் சந்தான லட்சுமி, காந்திமதி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×