search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறையின் அனுமதி பெற்றே மலையேற்ற பயிற்சிக்கு சென்றோம்- வழிகாட்டி பேட்டி
    X

    வனத்துறையின் அனுமதி பெற்றே மலையேற்ற பயிற்சிக்கு சென்றோம்- வழிகாட்டி பேட்டி

    மலையேற்ற பயிற்சிக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி வனத்துறையினரின் அனுமதி பெற்றே சென்றதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழிகாட்டி தெரிவித்துள்ளனர்.#TheniFire #KuranganiForestFire

    உத்தமபாளையம்:

    போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து ஆய்வு செய்த பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் அனுமதி பெறாமல் மலையேற்ற பயிற்சிக்கு சென்றதால்தான் விபத்து நேர்ந்ததாக தெரிவித்தனர்.

    ஆனால் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழிகாட்டியாக சென்ற வாலிபர் வனத்துறையினரின் அனுமதி பெற்று ரூ.200 கட்டணம் செலுத்தி சென்றதாக ஆதாரத்துடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் பெருந்துறை பகுதியில் சுற்றுலா அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது ஒருங்கிணைப்பில் 12 பேர் கொண்ட குழுவினர் குரங்கணிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது தீ விபத்து நடந்து உயிர் பலியும் ஏற்பட்டது.

    இது குறித்து கண்டமனூர் விலக்கு போலீசார் ஒருங்கிணைப்பாளர் பிரபுவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 9-ந் தேதி இரவு ஈரோடு சென்னிமலையில் இருந்து வேன் மூலம் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணிக்கு மலையேற்ற பயிற்சிக்காகவும், சுற்றிப்பார்க்கவும் வந்தேன். என்னுடன் ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ்குமார், கண்ணன், விவேக், சக்திகலா, சவீதா, திவ்யா, நேகா, தமிழ்செல்வன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா ஆகியோரும் வந்தனர். தேனி வழியாக போடிக்கு சென்று 10-ந் தேதி குரங்கணிக்கு புறப்பட்டோம். வழியில் முந்தல் வனத்துறை சோதனைச் சாவடியில் ஒரு நபருக்கு ரூ.200 வீதம் பணம் கட்டி காட்டுக்குச் செல்ல முறையாக அனுமதி சீட்டு பெற்ற பிறகே சென்றோம்.

    குரங்கணி பகுதியை பற்றி எனக்கு சரிவர தெரியாததால் வனத்துறையினர் ரஞ்சித் என்ற வாலிபரை வழிகாட்டியாக எங்களுடன் அனுப்பி வைத்தனர். அவர் உதவியுடன் நரிப்பட்டி, ஒத்தமரம் வழியாக கொழுக்கு மலைக்கு மாலை 6 மணிக்கு சென்றோம். இரவு டெண்ட் அமைத்து அங்கேயே தங்கினோம். பின்னர் சென்னையைச் சேர்ந்த அருண் பிரபாகரன் என்பவர் தலைமையில் 26 பேர் கொழுக்கு மலை வந்து எங்கள் அருகிலேயே தங்கியிருந்தனர். 11-ந் தேதி காலை 9.30 மணிக்கு அருண் பிரபாகரனுடன் வந்தவர்களின் 3 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களை ஜீப் மூலம் சூரிய நல்லிக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அருண் பிரபாகரன் குழு செல்ல அவர்களை தொடர்ந்து நாங்கள் குரங்கணி பகுதிக்கு கீழே இறங்கி வந்தோம். மதியம் 2 மணி அளவில் ஒத்தமரம் பகுதியில் அருண் பிரபாகரன் குழுவினர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வில் இருந்தனர்.

    அப்போது எங்களுடன் வழிகாட்டியாக வந்த ரஞ்சித் தீ விபத்தை உணர்ந்து வேகமாக எங்களை செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் எங்கள் குழுவில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் நான், ரஞ்சித், சாதனா, பாவனா, நேகா, ராஜசேகர், அருணுடன் வந்த 3 பெண்கள் ஆகியோர் எந்தவித தீக்காயங்கள் இன்றி குரங்கணிக்கு தப்பித்து வந்து விட்டோம்.

    அதன் பின்னர் நரிப்பட்டியில் உள்ள மக்கள், காவல் துறையினர், வனத்துறையினர் சகிதமாக நாங்கள் சென்ற பகுதியில் தீ விபத்து நடந்ததை உணர்ந்து அவர்களை காப்பாற்ற போராடினர். இருந்தபோதும் 9 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து விட்டது. காயமடைந்தவர்களை கிராம மக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

    குரங்கணி மலையேற்றத்துக்கு சென்ற ஈரோடு குழுவினருடன் வழியாகட்டியாக ரஞ்சித் (25) என்பவர் சென்றார். அவர் விபத்து குறித்து தெரிவிக்கையில், நான் ஏ.சி. மெக்கானிக்காகவும், தீ தடுப்பு காவலராகவும், தற்காலிக பணியில் உள்ளேன். வனவர் ஜெயசிங் என்னை முதல் நாள் கூப்பிட்டு ஈரோட்டில் இருந்து ஒரு குழு வருவதாகவும், அவர்களை கொழுக்கு மலைக்கு அழைத்துச் சென்று திரும்புமாறும் கூறினார்.

    பின்னர் 12 பேரையும் கொழுக்கு மலைக்கு அழைத்துச் சென்றேன். ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து கொண்டு இருந்தபோது சென்னையில் இருந்து வந்த குழுவினருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை உணர்ந்ததால் அவர்கள் அனைவரையும் கீழே இறங்குமாறு எச்சரித்தேன். அதன் படி முன்னே சென்றவர்கள் தப்பித்து விட்டனர். பதட்டத்தில் நாலாபுறமும் சிதறி சென்ற பலர் வழி தெரியாமல் பள்ளத்தில் குதித்ததால் உயிரிழந்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #TheniFire #KuranganiForestFire #tamilnews

    Next Story
    ×