search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச ‘வை-பை’ வசதி
    X

    சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச ‘வை-பை’ வசதி

    சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச ‘வை-பை’ வசதி வழங்குவதற்கு ஏ.சி.டி. என்ற தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச ‘வை-பை’ வசதி வழங்குவதற்கு ஏ.சி.டி. என்ற தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக அரசுடன் அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (ஏ.சி.டி.) என்ற தனியார் நிறுவனம், அரசு பள்ளிக்கூடங்களில் இலவச வை-பை (கம்பி இல்லாத அதிவேக இணையதள இணைப்பு) வசதி அமைத்துத் தருவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது.

    பின்னர் நிருபர்களுக்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 252 பள்ளிகளிலும், கோவையில் 66 பள்ளிகளிலும் மொத்தம் 318 அரசு பள்ளிகளுக்கு, வை-பை வசதி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த இணையதளம் மூலம், உலக விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 மாவட்டங்களில், வை-பை வசதிக்காக, பூமிக்கடியில் கேபிள் பதிக்க உள்ளனர்.

    வரும் கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ.யை விட மேலான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். ஏப்ரல் மாதத்தில் புத்தக வடிவில் அந்த பாடத்திட்டம் வழங்கப்படும். 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டிலும் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கான உதவி மையங்கள் விரைவில் தொடங்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, விஞ்ஞான வளர்ச்சிக்காக ரோபோ பயிற்சி நடத்தப்பட்டது. மேல் நாடுகளுக்கு ஈடாக, கல்வி தரத்தை உயர்த்த, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோ பயிற்சி கல்வியை வழங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை 500 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலவச வை-பை வசதி மூலம் ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு 300 ஜி.பி. வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×