search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அடையாளத்தை இழந்த ஆடை
    X

    அடையாளத்தை இழந்த ஆடை

    ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.
    அரசனுக்கு ஒரு ஆடை, பணக்காரனுக்கு ஒரு ஆடை, ஏழைக்கு ஒரு ஆடை என்று விதவிதமாக பரிணமித்தது ஆடையின் வடிவங்கள். நம் முன்னோர்களில் ஆண்கள் வேட்டி, சட்டையும், இளம் பெண்கள் பாவாடை, தாவணியும், திருமணமான பெண்கள் சேலையையும் அணிந்தனர்.

    ஆனால் காலசுழற்சியில் இன்று ரகங்கள் வீதம் விதவிதமான ஆடைகள் அணிவகுத்து நிற்கின்றன. ஆடை என்பது மானத்தை மறைக்க என்ற நிலைமாறி இன்று பலரது பார்வையையும் நம்பக்கம் திருப்ப என்ற நிலைக்கு வந்திருக்கிறது. நாம் உடுத்தும் ஆடைகளில் புதுமை இருந்தால் பலரும் நம்மை உற்றுநோக்குவார்கள் என்ற மனநிலை பலரது மனதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஆடை ஒருவரை அழகுபடுத்துவதில் தவறில்லை. அதற்காகத்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்றனர் நம்முன்னோர்கள். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அணியும் ஆடை ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் பலரும் முழுக்கால் சட்டை (பேன்ட்) இடுப்பை விட்டு கீழே இறங்கி இருப்பது போலவும், அதற்குள் அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரிவது போலவும் உடை அணியும் நிலை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சிலர் சட்டை அணிந்தால் 3 பொத்தான்களுக்கு கீழே உள்ள பொத்தான்களை மட்டுமே அணிந்து கொள்ளும் நிலையும் உள்ளது. ஆடை என்பது ஒருவரை மேம்படுத்தி அழகுற காட்டுவது தானே தவிர, எந்த உள்ளாடை அணிந்து இருக்கிறோம் என்று வெளிக்காட்டுவதற்கு அல்ல.

    அதேபோல சில பெண்களும் உடல் அழகை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஆடைகளை நாகரிகத்தின் சின்னம் என்று கூறி அணிந்து கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆபாசமாக உடை அணிகிறீர்கள் என்று கேட்டால் எங்கள் உடையில் எந்த தவறும் இல்லை. பார்ப்பவர்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது என்று பதிலளிக்கிறார்கள். ‘உடலழகை ஊருமெச்ச காட்டக்கூடாது’ என்ற சினிமா பாடல் வரிகள் சிந்திக்க தக்கது. அதுமட்டுமா ஆண்களும், பெண்களும் தேவையற்ற வாசகங்களை கொண்ட பனியன்களை ஆர்வமுடன் வாங்கி அணிகிறார்கள்.

    நான் தனிமையில் இருக்கிறேன், இந்த இடம் பார்ப்பதற்கு மட்டுமே, என் இதயவாசல் திறந்து இருக்கிறது, என்பது போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்கலாம். வாசகங்கள் இருப்பது தவறல்ல. அது வாழ்க்கைக்கு உதவும் வாசகமாகவோ, தத்துவத்தை தெரிவிக்கும் வாசகமாகவோ, பிறருக்கு பயன்படும் வாசகமாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். தத்துவஞானிகளின் வரிகள், திருக்குறள் வரிகள், பொன்மொழிகள் போன்றவற்றை எழுதிய பனியன்களை அணியலாம்.

    ஆடை என்பது மானத்தை காக்க என்ற நிலைமாறி அடையாளத்துக்கானதாக மாறியது. அதன்பின்னர் அலங்காரத்திற்கானது என்ற நிலையில் இருந்து இன்று உடல்அழகை வெளிக்காட்டுவதற்கானது என்ற நிலையில் வந்து நிற்கிறது. இதனால் ஆடை தனது அடையாளத்தை இழந்து விட்டது.

    ஆடை ஒவ்வொருவருக்கும் தனி அடையாளமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தலைவர்கள், அரசர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள், டாக்டர்கள், போலீஸ் என பல்துறையில் பயணிப்பவர்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துவது அவர்கள் உடுத்தும் ஆடைகள்தான். நாம் தேர்ந்தெடுத்து அணியும் ஆடை நம்மை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டும் சான்றாக இருக்க வேண்டும். ஆடைகளை அணிவதில் அனைவரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆடை ஒவ்வொருவரின் தனித்தன்மையையும், தனி அடையாளத்தையும் வெளிக்காட்ட வேண்டும். அதாவது முழு மனிதனாக அடையாளம் காட்ட நாம் அணியும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்காத அளவுக்கு இருக்க வேண்டும். ஆடையின் அடையாளம் மனிதன் அல்ல. மனிதர்களின் அடையாளம் தான் ஆடை.

    -எஸ்.முத்துக்குட்டி, அகஸ்தீஸ்வரம்

    Next Story
    ×