search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அன்பால் சாதிப்போம்
    X

    அன்பால் சாதிப்போம்

    ஒருவருக்கு ஒருவர் தூய்மையான அன்பை மட்டும் செலுத்தினாலே மனிதம் என்ற உன்னதமான பூ மணம் வீச ஆரம்பிக்கும்.
    மனித பிறப்பு என்பது இவ்வுலகில் நாம் பெற்ற மிகப்பெரிய அரியதோர் பிறப்பு ஆகும். இத்தகைய அரிய பிறப்பை எடுத்த நாம், இந்த பிறவி எடுத்ததன் நோக்கம் அறியாமல் இப்பிறவியின் காலத்தை வீணாய் கழித்து வருகிறோம். தனது காலத்தை வீணாய் கழிப்பதோடு இல்லாமல் பிறரின் வாழ்க்கையில், உரிமையில் தலையிட்டு மற்றவர்களையும் சிரமப்படுத்தி வருகிறோம்.

    உயிர்களின் மகத்தான பிறவியான மனிதனின் வாழ்க்கையை பகுத்து ஆராய்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மை பண்புகளையும் தனது திருக்குறளில் தெளிவாக விளக்கி உள்ளார். அவர் கூறியபடி அறநெறியுடன் வாழ்ந்தாலே மனிதர்கள் சிறப்பு அடையலாம். ஆனால், தற்போதைய எந்திர மயமான வாழ்க்கையில் யாரும் அறநெறிகளை பற்றி கவலைப்படுவதாகவே இல்லை. பணம் ஒன்று மட்டுமே தற்போதைய மனிதர்களுக்கு பிரதானமாக தெரிகிறது. அன்பு, அறம், மனிதநேயம் எல்லாம் கானல் நீராகவே காணப்படுகிறது..

    ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாகிய அண்ணன், தம்பிகளுக்கு இடையிலேயே தற்போது ஒற்றுமை என்பதை காண்பது அரிதாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கணவன்-மனைவி இடையே உண்மையான அன்பு மலராத காரணத்தால், ஏராளமான தம்பதிகள் விவாகரத்து பெறுவதை பார்க்க முடிகிறது. ஏன்? காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கூட உண்மையான புரிதல் இன்றி விவாகரத்து பெறும் நிலையை பார்க்க முடிகிறது. ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களே இப்படி ஒற்றுமையாக இல்லாத நிலையில், ஒரு தெருவில் இருக்கும் நபர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதனால் ஒரு ஊருக்குள் போட்டி, பொறாமையால் பல கோஷ்டிகள் நிலவுவதற்கு காரணமும் அன்பு இல்லாமையே.

    உலக அளவிலும் நாம் அனைவரும் மனித இனம். நமது மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற பரந்த மனப்பான்மை இல்லாததன் காரணமாகவே நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினைகளும், போர்களும் ஏற்படுகின்றன. உலக அளவிலான தலைவர்களும் நாம் அனைவரும் மனிதர்களே என்ற ஒற்றை எண்ணத்தில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருந்தால், உலக நாடுகளில் பஞ்சம், பட்டினியால் மக்கள் சாகும் நிலை வரவே வராது ‘அன்பே சிவம்‘ என்கிறார்கள். எனவே, ஒருவருக்கு ஒருவர் தூய்மையான அன்பை மட்டும் செலுத்தினாலே மனிதம் என்ற உன்னதமான பூ மணம் வீச ஆரம்பிக்கும்.

    -ஜெகதீச தாசன்
    Next Story
    ×