search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மங்கையர் போற்றும் மகளிர் தினம்
    X

    மங்கையர் போற்றும் மகளிர் தினம்

    உலக பெண்கள் தினமான மார்ச்-8 என்பது நம்மால் கொண்டாடக் கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது.
    உலக பெண்கள் தினமான மார்ச்-8 என்பது நம்மால் கொண்டாடக் கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது. இந்த நாளின் பின்னணியில் உலக நாடுகளை சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களும், முயற்சிகளும் அஸ்திவாரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். மங்கையர் போற்றும் இந்த மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது. மகளிர் தின விழா கொண்டாடும் நமது தேசத்தில் ஒரு காலத்தில் பெண்ணடிமை இருந்தாலும், பெண்ணை பாரத தேவியாகவும், நதிகளாகவும் வணங்கி வழிபடும் பாரம்பரியமும் நமக்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் என்றே மகளிர் தினத்தை குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

    18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். அங்கு அப்போது பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.பின்னர் 1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது.

    பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தோல்வி அடைய செய்தனர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானமும் நிறைவேறவில்லை.

    1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டு முதல் தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த சாதனை நன்னாளில் மகளிர் முன்னேற்ற பாதையில் தொடர்ந்து அடி எடுத்து வைக்க நாமும் வாழ்த்துவோம்.

    இந்தியாவில், மகளிர் தின கொண்டாட்டங்கள் சமீப காலமாகத்தான் பிரபலமாகி வருகின்றன. பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர், பல்வேறு பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகமே பார்த்து வியக்கும் நமது நாட்டில் பெண்கள் போற்றப்படத்தக்க நிலையில் உயர்ந்து வருவது பெருமைப்படத்தக்க விஷயமாகும்.
    Next Story
    ×