search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே பயப்பட வேண்டாம்.. பாதுகாப்பாய் வாழலாம்..
    X

    பெண்களே பயப்பட வேண்டாம்.. பாதுகாப்பாய் வாழலாம்..

    குழந்தையை வேலைக்காரரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள், வீட்டில் ரகசியமாக இந்த ‘பேபி கேமரா’வை பொருத்திக்கொள்ளலாம்.
    குழந்தையை வேலைக்காரரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள், வீட்டில் ரகசியமாக இந்த ‘பேபி கேமரா’வை பொருத்திக்கொள்ளலாம்.

    பரபரப்பான இன்றைய வாழ்க்கை பலருக்கும் பயம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்த்து, வீடுகளில் பாதுகாப்பில்லை என்று நினைக்கிறார்கள். கொள்ளையை தடுக்கவும், கியாஸ் கசிவு போன்றவைகளை உணரவும், வீட்டின் எல்லா பகுதிகளையும் சரியாக பூட்டியிருக்கிறோமா என்பதை கண்டறியவும் நவீன தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. வீட்டின் பூட்டை, உங்கள் ஸ்மார்ட் போனில் இணைத்து செயல்படுத்தக்கூட இப்போது வாய்ப்பிருக்கிறது.

    உங்கள் வீட்டிற்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு கொடுக்கலாம் என்று பார்ப்போமா!

    கண்ட்ரோல் பேனல் மற்றும் கீ போர்டு

    புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீனமுறையில் கொள்ளையடிப்பவர்கள் இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க, புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கையாள முதலில் கீ போர்டு தேர்ந்தெடுக்கவேண்டும். வீட்டில் பொருத்தியிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள், அலாரம், சென்சர் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து, செயல்படுத்தும் கட்டமைப்பு இது. இந்த கண்ட்ரோல் பேனலை செல்போனுடன் இணைத்துவிட்டால், நீங்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தே உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்.

    ஸ்மார்ட் டோர் லாக்

    வீட்டின் பாதுகாப்பு என்றாலே எல்லோருக்கும் ‘டோர் லாக்’குகள்தான் நினைவுக்கு வரும். இப்போது நவீன டோர் லாக்குகள் வந்துள்ளன. இதனை கார் டோர் ரிமோட் அல்லது செல்போனை பயன்படுத்தி இயக்கலாம். வீட்டை பூட்டிவிட்டோமா? இல்லையா? என்று அடிக்கடி குழம்புகிறவர்களாக இருந்தால், வீட்டை பூட்டும் நேரத்தையும், திறக்கும் நேரத்தையும் முன்னதாகவே அதில் பதிவு செய்துகொள்ளலாம். வெளிப்புறமாக திறக்கும் அனைத்து வாசல்களையும் இந்த கட்டமைப்போடு ஒருங்கிணைத்துவிடலாம். கை விரல் ரேகையை அடிப்படையாகக் கொண்ட பிங்கர் பிரிண்ட் லாக்கர்களும் உண்டு. அதனையும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் டோர் லாக்குகளை நேரடியாகவும், ஆன் லைன் ஷாப்பிங் மூலமும் வாங்கலாம். இதன் உத்தேச விலை ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை.



    சி.சி.டி.வி. கட்டமைப்பு

    நவீன முறையில் வீடுகளை பாதுகாக்க இன்டோர், அவுட் டோர் கேமராக்கள் உள்ளன. தொந்தரவு செய்யும் நோக்கத்துடனோ, கொள்ளையடிக்கும் நோக்கத்துடனோ வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ நுழைபவர்களின் தோற்றத்தை பதிவு செய்து கம்ப்யூட்டருக்கோ, செல்போனுக்கோ இவை வழங்கும். கும்மிருட்டிலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்ய இன்ப்ராரெட் அமைப்புகளும் இதில் உண்டு. செல்போன் ஆப் மூலமும் இதனை செயல்படுத்தலாம். உங்கள் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உலகின் எந்த மூலையில் இருந்தும் இதன் மூலம் உங்களால் பார்க்க முடியும். ரூ.20 ஆயிரத்தில் இருந்து இதன் விலை ஆரம்பிக்கிறது.

    வீடியோ டோர் இன்டர்காம்

    வீட்டின் உள்ளே நின்றுகொண்டே, கதவின் வெளியே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளவும், கதவை திறக்காமலே அவரோடு பேசவும் உதவும் கட்டமைப்பு இது. வெளியே பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, அங்கே நின்றுகொண்டிருக்கும் நபர் யார் என்பதை, உள்ளே இருக்கும் மானிட்டரில் காட்டும். துல்லியமாக பார்க்கவும், பேசவும் முடியும். இது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை கொண்டது.

    டோர் வின்டோ சென்சர்

    இதுவும் மிகுந்த பலனளிக்கக்கூடிய பாதுகாப்பு கட்டமைப்புகளில் ஒன்று. வாசல் அருகிலேயோ, ஜன்னல் அருகிலேயோ வீட்டில் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் யாராவது வந்தாலோ, திறக்க முயற்சித்தாலோ சிக்னல் கொடுக்கும். அதோடு கண்ணாடிகளை உடைக்க முயற்சித்தால் சிக்னல்தரும் ‘பிரேக்கிங் சென்சர்களும்’ வைத்தால் பிரச்சினை தீர்ந்தது. திருட்டு முயற்சிகள் நடக்கும்போது அலாரம் சத்தம் எழுப்புதல், உரிமையாளரின் ஸ்மார்ட் போனுக்கு தகவல் தருதல் போன்ற வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பாதுகாப்பு அலாரம்

    வீட்டின் சுற்றுப்பகுதிகளில் யாராவது அனுமதி இல்லாமல் வந்தால் உடனே சென்சர் மூலம் அதை அறிந்து கொள்ளலாம். அப்போதே உஷார் செய்யும் அலாரமும் அடிக்கும். உரிமையாளரின் செல்போனுக்கும் அந்த தகவல் தெரியும். ஓடிப்போய் திருடனை பிடித்துவிடலாம். பிரச்சினைக்குரியவர்களின் சின்னச்சின்ன சலனங்களை கண்டறியும் செக்யூரிட்டி லைட்டிங் சிஸ்டத்தையும் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.



    இமேஜ் சென்சர்கள்

    வீட்டிற்கு வெளியே யாராவது வந்தால் அவரை போட்டோ எடுப்பதோடு, அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் பணியையும் இது செய்யும். செலவு குறைந்த பாதுகாப்பு கட்டமைப்பு இது. இதை பயன்படுத்தினால் கதவு, ஜன்னல் சென்சர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடலாம்.

    அப்ளிகேஷன் டைமர்

    வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிடும்போது, வீட்டின் உள்ளே புகுந்து திருடுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவனத்தை திசைதிருப்பவும், ஆட்கள் உள்ளே இருப்பது போன்ற மாயையை உருவாக்கவும் இத்தகைய சுவிட்சுகள் பயன்படும். இரவில் வீட்டின் உள்ளே, வெளியே திடீர் திடீரென்று லைட்டுகளை எரியவிடுதல், டி.வி.யை ஆன் செய்து ஆப் செய்தல் போன்ற ஏற்பாடுகளை நேரத்துக்குதக்கபடி இந்த ஸ்மார்ட் சுவிட்சுகள் செய்யும். இதன் விலை ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் வரை உண்டு.

    ஸ்மார்ட் கேரேஜ் கண்ட்ரோல்


    பெரும்பாலான வீடுகளில் வண்டிகளை நிறுத்தும் கேரேஜ்கள் திறந்துதான் கிடக்கின்றன. அதனால் திருடர்கள் எளிதாக உள்ளே புகுந்து விடுவார்கள். மட்டுமின்றி எங்கேயாவது திருடிவிட்டு, அங்கே வந்து அடைக்கலமாகிவிட்டு, பின்பு எளிதாக தப்பிவிடுவதும் உண்டு. அத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கேரேஜ் கண்ட்ரோல் உதவும். இதுவும் டோர் சென்சர் போன்று உதவும்.

    இவைகளைத் தவிர எலக்ட்ரானிக் சேப் லாக்கர்கள், மோஷன் சென்சர்கள், பயர் அன்ட் ஸ்மோக் டிடெக்டர், கார்பன் மோனாக்சைடு டிடெக்டர், சேப்டி கேட் போன்ற பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகளும் உள்ளன.
    Next Story
    ×