search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காதல் என்பது என்ன? - ஏன் காதலிக்க வேண்டும்?
    X

    காதல் என்பது என்ன? - ஏன் காதலிக்க வேண்டும்?

    காதல் என்பது என்ன? - ஏன் காதலிக்க வேண்டும்? என்பதற்கு உளநலவியல் நிபுணர் டாக்டர் சாலினி தரும் அறிவியல் பூர்வமான விளக்கத்தை பார்க்கலாம்.
    உலகத்தையே வென்ற ஷாஜஹானாக இருந்தாலும், ஊர் நாட்டில் உழலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி - காதல் என்பது உலக பொது உணர்வு. உலகளாவிய கலாசாரம் என்போம். தொலை தூரத்தில் மறைவாக வாழும் ஏதோ ஓர் ஆதிவாசி சிறு கூட்டத்திலும் காதல் என்கிற இந்த உணர்வு இதே வீரியத்துடன் வியாபித்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆக எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது, உன்னதம் என்று கருதப்படுவது. எத்தனை தடைகள் வந்தாலும் சேர்ந்தே தீருவது என்கிற உத்வேகத்தை தருவது. இது இல்லை என்றால் வாழ்வில் நிறைவே இல்லை என்று எல்லா மனிதரும் அடைய விரும்புவது... அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காதல் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

    இதை விட பெரிய ஆச்சரியத்தை உங்களுக்கு சொல்கிறேன்.. மனித குரங்கு வகையராவிலேயே மனிதர்கள் மட்டும் தான் இவ்வளவு காதலிக்கிறார்கள். நம் ஒன்றுவிட்ட உறவான சிம்பான்சிகளோ, கொரில்லாக்களோ இவ்வளவு ஆசையாய் காதல் கொள்வதே இல்லை. நம்மை போன்ற பிற பாலூட்டி மிருகங்கள் ஆடு, மாடு, புலி, சிங்கம் என்று எதுவுமே காதலிப்பதில்லை. சீசனுக்கு சீஸன் கிடைத்த துணையுடன் சம்பிரதாயமாய் உறவு கொள்வது மட்டும்தான் இவற்றின் இயக்கம்.

    ஆனால் மனிதர்கள் பாலூட்டிகளாய் இருந்தாலும் அவற்றின் மானா வரிபுணர்ச்சி என்கிற பொது விதியை நாம் பின்பற்றுவதில்லை. நமக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பறவைகளின் புணர்ச்சி விதியை தான் நாம் கடை பிடிக்கிறோம். அன்றில், அன்னம், பென்குவின், கழுகு என்று எல்லா காலத்திலும், எல்லா மொழிகளிலும் காதலுக்கு இலக்கணமாய் சொல்லபடுபவை பறவைகள் தான். காரணம் இந்த பறவைகள் தேர்ந்தெடுத்த துணையுடன் வாழ்நாள் முழுக்க இணைந்தே இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ்கின்றன.

    பாலூட்டிகளில் இல்லாத பழக்கமாய் மனிதர்கள் மட்டும் ஏன் பறவைகளை போல ஒரே தாரமாய் ஒரே இணை என்கிற யுக்திக்கு மாறினார்கள்? நாம் வானரங்களாய் வாழ்ந்த காலத்தில் நம் மூதாதையர்களும் மானாவரி புணர்ச்சியில் தானே ஈடுபட்டு இருந்திருப்பார்கள்? அந்த உத்தியை விட்டு விட்டு பறவைகளின் உத்திக்கு நவீன மனிதர்கள் மாறியிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்க வேண்டுமே?

    இருக்கிறது! ஒரு மிக முக்கிய காரணம்... பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம், இரண்டு உயிரினத்திற்கும் பிள்ளை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவால். பறவைகளை பொறுத்தவரை முட்டைகளை அடைகாக்க வேண்டும். ஒரு பறவை அடை காக்கும் போது இணை பறவை வேட்டையாடி உணவு  கொண்டுவர வேண்டும். இப்படியாக உணவு, உஷ்ணம், உறைவிடம், பாதுகாப்பு,  இளசுகளுக்கு வாழ்வியல் பயிற்சி என்று அனைத்திற்குமே தாயும் தந்தையும் சேர்ந்து வாழ் நாள் முழுக்க சளைக்காமல் ஒற்றுமையாய் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.



    இந்த ஒற்றுமை திடுதிப்பென்று வந்து விடுமா? வேட்டைக்கு போகிற பறவை திரும்ப குறிதவறாமல் தன் கூட்டிற்கே வருவது எப்படி? வேறு பறவைகள் மேல் இனக்கவர்ச்சி ஏற்படாமல் தன் இணையோடு மையல் கொண்டிருப்பது எப்படி? எத்தனை பருவங்கள் போனாலும் அதே காதலுடன் கூடி குழவுவது எப்படி?
    எத்தனையோ விதங்களில் சொதப்பல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும், எந்த வித பெரிய அசம்பாவிதங்களுமே நேராமல் ஒரே சீராக எப்படி இவற்றால் வாழ முடிகிறது? அப்படி லாவகமாய் கச்சிதமாய் இயற்கை இந்த பறவைகளின் மூளையை மாற்றி அமைத்திருக்கிறது. தொடர்ந்து பந்தத்தை ஏற்று அனுசரித்து பேணி பராமரிப்பதை விருப்பத்தோடு மேற்கொள்ளும்படி அவற்றின் மூளை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் நம் வீட்டு மாட புறாக்கள் அவ்வளவு கொஞ்சி மகிழ்கின்றன.

    ஆட்டு குட்டியும் கன்றுகுட்டியும் பிறந்த மறுகனம் தானாய் எழுந்து  நின்று  தாயைத் தேடிப் போய் தானே பால் அருந்தும். ஆனால் மனித குட்டிகள் இவ்வளவு சுயேட்சை செயல்பாட்டுடன் பிறப்பதில்லை. மனித குட்டிகளும் ஆட்டுக் குட்டிகளைப் போல சுயேட்சையாக இயங்க அவற்றுக்கு மொத்தம் 21 முதல் 24 மாதங்கள் கர்ப்பவாசம் தேவைப்படும்... ஆனால் 21 முதல் 24 மாதம் கர்ப்பத்தில் தாக்குப்பிடித்து முழு மூளை வளர்ச்சி அடைந்தபின் பிறந்தால், மனித பெண்ணின் இடுப்பை விட குட்டி சிசுவின் தலை சுற்றளவு பெரிதாகி விடும். பிரசவம் சாத்தியப்படாது.

    அதனால்தான் மனித சிசுக்கள் பாதி வளர்ந்த நிலையிலேயே பிரசவமாகின்றன. மீதம் உள்ள வளர்ச்சியை கருவறைக்கு வெளியே முடித்துக் கொள்ள வேண்டி உள்ளது. இப்படி சுயமாய் இயங்க முடியாமல் சார்ந்தே வாழும் இந்த குட்டியை கரை சேர்க்க தாயினால் மட்டும் முடியாது. தந்தையும் கூடவே இருந்து தன் கடமைகளை ஆற்ற வேண்டும். ஆனால் மனித தாயும் தந்தையும் மரபணு ரீதியில் பறவை வகையறா இல்லை, வானர வகையறா - வானரங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவை இல்லை, மானாவரி புணர்ச்சி கொள்பவை.

    இந்த மானாவரி முறையிலிருந்து, ஓரே இணை முறைக்கு மனிதர்கள் மாற வேண்டும் என்றால் அவர்கள் மூளையில் சில மாற்றங்கள் வேண்டும். கிட்டத்தட்ட பறவைகள் போலவே, அலுக்காமல் ஆர்வமாய் கூட்டு முயற்சியில் குழந்தைகளை பராமரிக்கும்  கவனம் சிதறா கண்ணிய மனம் வேண்டும். இந்த மூளை மாற்றத்தை இயற்கை மனிதர்களுக்கு அமைத்துள்ளது.

    இயற்கை ஏற்படுத்திய இந்த இனகவர்ச்சி + இணை தேர்வு + உளப்பதிவு + தொடருறவு ஆகிய இந்த நான்கும் கலந்தால் தான் வலுவான இணைப்புகள் ஏற்படும். இந்த நான்கில் இன கவர்ச்சி, இணை தேர்வு இவ்விரண்டும் எல்லா உயிர்களுக்குமே பொது. மூன்றாவதாய் ஒரு சமாசாரம் இருக்கிறதே உளப்பதிவு, அழுத்தம் இந்த மனநிலையை தான் நாம் மனித பாஷையில் காதல் என்கிறோம். காதல், நேசம், பாசம், பேணுதல் போன்ற இந்த வலிமையான நிண்ணுணர்வுகள் மட்டும் இல்லை என்றால் மானுடன் என்கிற ஜீவராசியே உலகில் இன்று இல்லாமல் போயிருக்கும்.



    இவ்வளவு முக்கியமான இந்த அழுத்தம் எப்படி ஏற்படும் தெரியுமா? பிள்ளை பிராயத்தில் தாய் தந்தை சேய் உறவில் மிக அந்நியோனியமான அழுத்தம் ஏற்படும். உடல் வாசம், உஷ்ணம், அணைக்கும் விதம், கொஞ்சும் மொழி, கொஞ்சும் விதம், அங்க அடையாளம், உறவாடல் நினைவுகள் என்று எல்லாமே நரம்பு முனைகளில் தினம் தினம் பதிந்துக் கொண்டே இருப்பதால் இன்னார் என்றதுமே அனிச்சையாய் பாசம், பற்று, பொறுப்பு ணர்வு, அவரை தனதாக பாவிக்கும் பரிவு என்று எல்லாமே மூளையில் மிக வலிமையாய் ஏற்படுகிறது.

    ஆண் பிள்ளையானது தன் தாயிடமிருந்து பெண் என்றால் எப்படி இருப்பாள்? எதிர் காலத்தில் என் இணையிடம் நான் என்ன எதிர்பார்க்கலாம் என்பது மாதிரியான விஷயங்களை கிரகித்துக் கொள்ளும். அதேபோல பெண் குழந்தையானது தன் தகப்பனுடனான உறவாடலில் இருந்து ஆணை பற்றிய அபிப்ராயம், எதிர்பார்ப்பு, ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ளும். இப்படி பெற்றோருடனான உறவை முன் மாதிரியாக வைத்துதான் பிள்ளைகளின் எதிர்கால கலவி வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள் அமைகின்றன.

    இப்படியாக பிள்ளை பிராயத்தில் முதல் கட்டமாய் பெற்றோரை உளபதிவு செய்த மனிதர்கள் பருவம் வந்ததும் இன கவர்ச்சியின் காரணமாய் தனக்கென்று ஒரு துணையை தேடிக் கொள்ளும் வேட்கைக்கு உந்தப்படுகின்றன. அதிலும் மிக விசித்திரமாய் இதில் இயற்கை ஆணுக்கு ஒரு நியதியும், பெண்ணுக்கு ஒரு நியதியும் வைத்திருக்கிறது.

    ஆணுக்கு நியதி சுற்றி இருக்கும் பிற ஆண்களை விட “நான்தான் பெரிய  ஜித்தன்” என்று தலைமை பண்புகளை பிரகடனப்படுததி, தான் ஓர் உயர் சமூக அந்தஸ்து ஆண் என்கிற மனப்பான்மையை உருவாக்குகிறது. இதனால் தான் பருவம் அடைந்த ஆண்கள் தங்களுக்குள்ளே எப்போதும் மோதி பலப்பரீட்சை செய்து, போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலோட்டமாய் பார்த்தால் இது அற்பமாக கூட தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் புரியும், ஆண்களுக்குள் நடக்கும் இந்த போட்டி அடிப்படையில் சிறந்த மரபணுக்களுக்கான தேர்வுதான்.

    இதே போல இயற்கை பெண்களுக்கும் ஒரு முக்கியமான நியதியை வைத்திருக்கிறது. இருக்கும் ஆடவரிலேயே சிறந்த மர பணுக்களை கொண்டவனை மட்டும் தரவரிசையில் தேர்வு செய்யும் செக்சுவல் செலெக்ஷன் எனப்படும் பாலியல் தேர்வை எல்லா ஜீவராசிகளிலும் இயற்கையின் பிரதிநிதியாய் பெண்ணினமே செய்கிறது. பெண்பாலின் இந்த ‘‘சிறந்த மரபணு கொண்டவனோடு மட்டுமே புணர்ச்சி’’ என்கிற இயற்கையின் இந்த மிக கறாரான விதியை அனுசரித்தே எல்லா ஜீவராசிகளிலும் ஆண்கள் தம்மை மிக கவர்ச்சியாக காட்டிக் கொள்ளயத்தனிக்கின்றனர்.

    பருவ வயது வந்ததும் இப்படி ஆணினம் தன்னை உயர் ரகமாக காட்டிக் கொள்ள முயல்வதும், பெண்ணினம் அவற்றுள் சிறந்த பிழைப்பு பண்புகளை கொண்டதை மட்டும் வடிகட்டி தேர்வு செய்வதுமாய், இவற்றுக்குள் ஒரு பாலியல் போரே நடைபெறுகிறது.

    ஒவ்வொரு விலங்கும் இந்த பாலியல் தேர்வு முறையை அதன் அடையாளத்தை வைத்தே எடை போடுகிறது. உதாரணத்திற்கு பெட்டை மயில் சேவல் மயிலின் தோகை நீளத்தையும் வனப்பையும் வைத்தே அவன் தரத்தை எடை போடும். அதே போல மனித பெண்களும் ஆணின் அடையாளத்தை வைத்துதான் ஆண்களை எடை போட்டு இனபெருக்கத்திற்கு தேர்வு செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் மற்ற விலங்குகளை போல அல்லாமல் ஒரு புதிய திருப்பமாய், மனித வரலாற்றின் வெவ்வேறு நிலைகளில் ஆணின் அடையாளம் வெவ்வேறு மாதிரியாக பரிணமித்துக் கொண்டே இருக்கிறது.



    மனிதர்கள் காடர்களாய் வாழ்ந்த போது மனித ஆணின் பிழைப்பு விகிதம் அவன் வேட்டைத் திறனை பொருத்தே இருந்தது. அதனால் அந்த கால காட்டுப் பெண் சிறந்த வேட்டுவனையே தேர்ந்தெடுத்து உறவு கெண்டாள். அதற்கு பின் வந்த காலத்தில் ஆயுத பயிற்சியே ஆணின் பிழைப்பு விகிதத்தை நிர்ணயித்தது. அப்போது பெண் ஆயிதபிரயோகத்தில் வல்லவனையே தேர்வு செய்தாள்.

    அதன் பின் வந்த காலத்தில் விவசாயம் பிரபலமானது. பல தொழில்கள் உருவாயின. அந்தந்த தொழிலில் வித்தகனையே பெண்கள் மணந்தார்கள். சொத்து ஆண்களுக்கே  உரித்தான போது, அதிக சொத்து இருக்கும் ஆணை மணப்பது யதார்த்தமாயிருந்தது. அதன் பின் வந்த காலத்தில் கல்வி பிழைப்பை நிர்ணயித்த போது கல்வியின் அடிப்படையில்  ஆடவர் தேர்வு நேர்ந்தது.

    தற்போது பெண்களும் சரிசமமாய் படித்து சம்பாதிக்கவும், சொத்துக்களை உரிமை கொண்டாடவும் முடிகிறது. இப்போது பெண் தன்னிடம் தோழமையோடு பழகி அன்பை பொழிய தெரிந்தவனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். இப்படியாக பெண்ணின் தேர்வு முறை ஆணின் தன்மையை படிப்படியாய் பரிணாமத்திற்கு உட்படுத்திக் கொண்டே வருவதை நாம் காணலாம்.

    பெண்ணின் இந்த உறவு விதிகள் தான் வீரியமிக்க  வாரிசுகளை உருவாக்க உதவுகின்றன என்பதை உணர்ந்து பெண்ணை சுதந்திரமாய் தேர்வு செய்ய ஊக்குவிக்கிறார்கள். சுயம்வர முறையில் ஒரே நாளில் ஒரு பந்தயத்தை வைத்து ஜெயிப்பவனை தேர்வு செய்து மணப்பதனாலும் சரி, தனி தனியாக வெவ்வேறு சந்தர்பங்களில் சந்திக்கும் ஆண்களை மனதில் எடைபோட்டு தேர்வு செய்வதானாலும் சரி, இயற்கை பெண்ணுக்கு என்று வகுத்த நியதியை தங்கு தடையின்றி அமலாக்க உதவும் கலாச்சாரங்களில் வீரியமிக்க வாரிசுகள் உருவாகிறார்கள்.

    இயற்கையின் இந்த நியதியே புரியாத பிற்போக்கான கலாச்சாரங்களில் இந்த பெண் பால் தேர்வு தடைபட்டு போகிறது. பெண்ணை தேர்வு செய்ய அனுமதித்தால் எங்கே நாம் தோற்று போய் விடுவோமோ என்று அஞ்சும் நிலையில் இருக்கும் வீரிய குறைபாடுள்ள ஆண்கள், பெண்களை இயற்கையின் போக்கில் விட தயங்குகிறார்கள். பெண் சுயமாய் தேர்வு செய்வதை தவறென கருதுகிறார்கள். தடை செய்கிறார்கள். பெண் ஆணை சந்திக்கவோ, தர பரிசோதனை செய்யவோ கூடாதென தடுக்கிறார்கள்.

    அதனால் தரத்தின் அடிப்படையில் தேர்வு என்கிற இயல்பான நியதிக்கு மாறாக, ஆணின் விருப்பத்திற்கு ஏற்ப தாம்பத்திய உறவுகள் நடைபெறுகிறது. வீரியமற்ற வாரிசுகள் உருவாகும் வாய்ப்பு ஓங்குகிறது. ஆனால் வீரிய குறைவு காரணமான இந்த வாரிசுகள் பலவீனமாய் இருப்பதினால், ஒரு நோய், கிருமியோ, ஒரு வலிய பகைவனோ, ஒரே ஒரு இயற்கை சீற்றமோ நேர்ந்தாலும் கூட, அந்த ஓட்டுமொத்த இனமே அழிந்து போகும் அபாயம் எப்போதுமே இருக்கிறது.

    இந்த விபரீதம் நேரக்கூடாது என்று தான் இயற்கை மிக அடிப்படையான ஓர் உந்து தலாய்  இந்த இணை சேர்தல், உளபதிவு கொள்ளுதல், அதன் பின் தொடருறவில் லயித்தல் என்கிற ரீதியில் மனித மனத்தை  தகவமைக்கிறது. இயற்கையுடன் ஒருங்கிணைந்து பயணிக்கும் கலாசாரங்கள், இந்திர விழா, வசந்த விழா, காதலர் விழா, தம்பதிகள் திருவிழா என்று விதவிதமான பெயர்களை வைத்தாவது, இணை சேருவதை ஊக்குவிக்கின்றன. இப்படி காதல் கொண்டு இல்லறம் நடத்தினால்தான் பறவைகள் மாதிரி பிரியாமல் நிலையான ஜோடியாய் சேர்ந்து தலைமுறைகளை பேணி வளர்த்தெடுக்க முடியும் என்று காதலை போற்றுகிறார்கள்.



    இத்தனை புரிதல் இல்லாதவர்கள், ‘காதலாவது கத்திரிக்காயாவது’? என்று அதன் மகத்துவம் தெரியாமல் பிதற்றுகிறார்கள். காதல் ஓர் ஆணையும் பெண்ணையும் ஆயுள் முழுக்க இணைத்தே கட்டி வைக்கும் மன்மத பசை. இயற்கை வெறுமனே ஆண் பெண் சிற்றின்பத்திற்காக காதல் என்கிற இந்த தொடர் போதையை உற்பத்தி செய்யவில்லை. இந்த மன இணைப்பு இருந்தால் தான் இரு பெற்றோரும் சேர்ந்தே இருப்பார்கள். இப்படி பெற்றோர் ஒற்றுமையாக இருந்தால் தான் குழந்தைக்கு பாதுகாப்பு, சவுகரியம், சீரிய வளர்ச்சி கிடைக்கும்.

    அதனால் தான் எல்லா காலத்திலும் எல்லா சமுதாயங்களும் காதலை கொண்டாடுகின்றன. காரணம் காதல் என்கிற இந்த இணக்க உணர்வு மட்டும் இல்லை என்றால் குடும்ப உறவுகள் பெரிதும் பாதிக்கப்படும். காதல் இல்லாத கணவனும் மனைவியும் சண்டை சச்சரவு, பிரிவு, பிள்ளை வளர்ப்பில் சேதாரம் என்று பிரச்சினைக் குள்ளாகிறார்கள்.

    ஆனால் கணவனும் மனைவியும் மாறா காதலுடன் வாழ்ந்தால் அது குழந்தைகளின் வாழ்வை ஸ்திரப்படுத்துகிறது. ஆக காதல் என்பது குழந்தை வளர்ப்புக்கு சாதகமான ஓர் அமைப்பு, ஆயிரம் காலத்து பயிரை செழிப்பாக்கும் உரம். அதனால் அது அவசியமானது.

    ஒரு முதிர்ச்சி அடைந்த பெண், வல்லமை மிக்க ஆணை சரியாக தரம் பார்த்து தேர்வு செய்து, இருவரும் ஒரு கூட்டை அமைத்து, குழந்தைகளை ஈன்று இணக்கமாய், அன்பாய் பிள்ளை வளர்ப்பை பகிரும் போது தான், காதலுக்கு மரியாதை, காரணம் இந்த நோக்கத்திற்காக தான் இயற்கை காதலை தோற்றுவித்தது.

    ஆனால் முதிர்ச்சி அடையாத குட்டிப்பெண், தேறாத ஒரு ஆணை நேசித்து எத்தனை லிட்டர் காதலை கொட்டி அவனை என்னதான் அன்பில் குளிப்பாட்டினாலும், அந்த காதலுக்கு மரியாதையே இல்லை. காரணம் வெறுமனே அன்பு பரிமாறிக் கொள்ளும் போதை அல்ல காதல், அது பிள்ளை வளர்ப்பு எனும் பெரும் கடமையாற்றும் ஒலிம்பிக் வீரர்களுக்கு மட்டுமே ஆன கிரியா உக்தி. அதை அற்பமாக துஷ்பிரயோகம் செய்வது என்ன நியாயம்?

    - உளநலவியல் நிபுணர் டாக்டர் சாலினி.

    Next Story
    ×