search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பணத்தை தேடும் பயணம்.... உறவுகளை மறந்த மனங்கள்
    X

    பணத்தை தேடும் பயணம்.... உறவுகளை மறந்த மனங்கள்

    தனது மகனையோ, மகளையோ வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு அவர்கள் வருகைக்காக காத்திருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம்.
    நான் லட்சியத்தை அடைந்து விட்டேன், ஆனால் வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர் முகநூலில் பதிவிட்டு இருந்தார். பணம் சம்பாதிக்க வேண்டி வெளிநாடு நோக்கி செல்பவர்களுக்கு, அங்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைக்கிறது. அது பணத்தை சம்பாதித்து கொடுக்கிறது.

    இப்படி வேகமான பயணத்தில் சிலர் சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோர், உற்றார், உறவினர்களையும் மறந்து விடுகிறார்கள் என்பது வேதனையின் உச்சம். பலரும் அவர்கள் சென்ற நாட்டிலேயே குடிஉரிமையை பெற்று விடுகின்றனர். அதன்பிறகு சொந்த ஊர் என்றால் அது எங்கிருக்கிறது என்று கேட்கும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    தனது மகனையோ, மகளையோ வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு அவர்கள் வருகைக்காக காத்திருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் சிலர் ஆதரவற்றவர்களாகவே வாழ்க்கையை ஓட்டும் நிலைகள் உள்ளன.

    இந்த வெளிநாட்டு மோகத்தால் பலரும் தங்கள் தந்தையின் உறவுகள், தாயாரின் உறவுகள் என பலரையும் இழக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. தன் குடும்பம், தனது வாழ்க்கை என்ற தனிமை வாழ்க்கை அவர்களுக்குள் நிறைந்து விடுகிறது.

    அதன்காரணமாக நகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் பெற்றோர் தனது பேரனைக்கூட வாட்ஸ் அப்பிலும், இன்டர் நெட் மூலம் கம்ப்யூட்டரிலும் பார்க்கும் சூழ்நிலைதான் இருக்கின்றனர். குடும்பம் என்ற ஒற்றைச்சொல்லில் இருந்த கரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதால், தனிமை என்ற வெறுமை மட்டுமல்ல, அன்பும், அரவணைப்பும் சுருங்கிப்போகின்றன. வெளிநாட்டு வேலை நமக்கு தேவைதான். 

    அது வருமானத்துக்கு மட்டும்தான் தேவை. அது நம்மை வசதிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதுவே நமது உறவுகளையும், வாழ்க்கை முறையையும் சிதைக்கும் ஒரு கருவியாக இருப்பது இந்திய வாழ்க்கை முறைக்கு வைக்கப்படும் வேட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனவே, பணம் சம்பாதிக்கும் நாம், அதில் சிறிது செலவு செய்து நமக்கான உறவுகள் நமது மண்ணில் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு ஆண்டுக்கொரு முறையாவது வந்து, அவர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டால் உறவுகளின் பயணம் என்றைக்கும் தொடரும்.

    -முத்துக்குட்டி, அகத்தீசுவரம்.
    Next Story
    ×