search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடைபிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள்
    X

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடைபிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள்

    எவ்வளவு வேலைகள் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
    வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே தரப்பட்டுள்ள ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    1. ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ (BMI) அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும்போது, இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உணவுப்பட்டியலைத் தயாரித்து சாப்பிட வேண்டும்.

    2. பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். நடுத்தர வயதுப் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடைகூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    3. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



    4. நடுத்தர வயதுப் பெண்கள், தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், அழகு, ஆரோக்கியம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலே அழகுதான். சரியான வயதில் உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், அழகாகவும் இருக்கலாம்.

    5. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு. இதை `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்கிறார்கள். இதன் காரணமாக முதுகுவலி, எலும்புகள் உடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.

    6. இரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் (Harmone) குறைபாடுகள் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துகொள்ளவேண்டும்.

    7. காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.

    8. 30 வயதைக் கடக்கும் பெண்களின் சரும நிறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். வயது அதிகமாக அதிகமாக தோலில் எண்ணெய்ச்சுரப்பு குறைந்துகொண்டே வரும். அதனால், தோல் வறண்டு போவது, சுருங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கண்களுக்கு அருகிலும், முகத்திலும் (Crow's Feet Area) சுருக்கங்கள் ஏற்படும். தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகிவிடும். வருடத்துக்கு ஒரு முறையாவது தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்துகொள்வது நல்லது.
    Next Story
    ×