search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
    X

    கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

    கர்ப்பத்திற்குத் திட்டமிடுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு எதுவும் நேராமல் தவிர்க்க, புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.
    கர்ப்பத்தின்போது, தாயிடமிருந்து ஆக்சிஜனும் உணவும் குழந்தைக்கு செல்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் புகைபிடிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் இந்த வேதிப்பொருள்கள் குழந்தையையும் அடைகின்றன. புகைபிடிப்பது, குழந்தைக்கு மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்ணுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது.

    புகைபிடிக்கும் பெண்கள் குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். அவர்கள் எளிதில் கர்ப்பமடைய மாட்டார்கள்.

    நிக்கோட்டின் ஃபெல்லோப்பியன் குழாய்களை குறுகச் செய்யலாம், இதனால் கரு அதில் செல்வது தடைபடலாம். இதனால் கருக்குழாய் கருவளர்ச்சி ஏற்படலாம். இதனால் பெரிய சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கருக்கலைப்பு செய்ய நேரிடலாம்.

    புகைபிடிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் அல்லது கர்ப்பத்தில் பிற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்களால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படலாம் சில சமயம் தாய் மற்றும் சேயின் உயிருக்கே கூட ஆபத்தாகலாம்.

    புகைபிடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையைக் கொண்டிருக்கலாம்.

    பெரும்பாலும் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும், அப்படிப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் சிறியதாகவும், குறைந்த ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

    ஆரோக்கியமற்ற, குறைவான எடையுடன் பிறக்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் அதிக நோய்களால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம், அரிதாக சில குழந்தைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.



    குழந்தை திடீரென இறப்பது (SIDS) எனும் கொடிய நிகழ்வு, பெரும்பாலும் புகைபிடிக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே நேர்கிறது.

    புகைபிடிக்கும் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும்போது, நுரையீரல் செயல்பாடு குறைவாக இருக்கலாம்.

    இந்தக் குழந்தைகளுக்கு பின்னாளில் ஆஸ்துமாவும் பிற நுரையீரல் நோய்களும் உண்டாகலாம்.

    பிறவி இதயக் கோளாறுகள், பிளவுபட்ட உதடுகள், பிளவுபட்ட தாடை போன்ற பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம்.

    குழந்தைகள் வளரும்போது, கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் கொண்டிருக்கலாம்.

    பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் கர்ப்பத்திற்கும் குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகள்...

    பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதாலும் கர்ப்பத்திற்கும் குழந்தைக்கும் பாதிப்பு உள்ளது. இந்தப் புகையை கர்ப்பிணிப் பெண் அதிகம் சுவாசிக்க நேர்ந்தால், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, குறைப்பிரசவம், குழந்தை எடை குறைவாகப் பிறப்பது மற்றும் பிற கர்ப்பப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இரண்டாந்தர புகையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, நுரையீரல் மற்றும் காத்து நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி குழந்தை திடீரென இறக்கும் (SIDS) வாய்ப்பும் அதிகம்.

    கர்ப்பமாகத் திட்டமிடும் பெண்கள், புகைப்பழக்கத்தை விட்டுவிடுவது மிக நல்லது, அவசியமும் கூட. ஆகவே, கர்ப்பத்திற்குத் திட்டமிடுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு எதுவும் நேராமல் தவிர்க்க, முதலில் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது நல்லது.
    Next Story
    ×