search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூரிய ஒளியின் மகிமை
    X

    சூரிய ஒளியின் மகிமை

    உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது.
    இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதியை பெறுகிறார்கள். காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி.யை அனுபவிக்கிறார்கள். மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி செல்கிறார்கள். இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி குளிர்சாதன வசதியை நோக்கி செல்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர் அவர்கள் மேல் விழாத நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

    தாவரங்களுக்கு எவ்வாறு சூரிய ஒளிக்கதிர் தேவைப்படுகிறதோ அதே போன்று தான் மனிதர்களுக்கும் சூரியஒளிக்கதிர் தேவையாகிறது. மனிதன் உயிர் வாழவும், உடல் உறுப்புகள் பலமிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகிறது. உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயற்கை. சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

    இதனால் உடலில் எலும்பு, தசை சம்பந்தமான நோய்கள் தாக்கும். இன்று பலர் இந்த நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சூரிய ஒளி உடலுக்கு தேவை என்பதும் அது கிடைக்காததால் இப்படி நோய் தாக்குகிறது என்பதும் தெரிகிறது. காலை வெயிலும் மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. மதியம் உச்சி வெயில் என்பது உடலுக்கு கெடுதலை தரும். பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக மதியம் உச்சி வெயிலில் நடமாட கூடாது.

    காலை வெயில் தான் வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவானதாகும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு உடையவர்கள் காலை வெயிலில் காலார நடந்து வர உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும். சில ஆலயங்களில் சூரிய வழிபாடு கூட நடைபெறுவது உண்டு. யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்ற உடற்பயிற்சியும் சூரியனை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் செய்யும் போது உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.

    மாயா, திருச்சி. 
    Next Story
    ×