search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    துரித உணவுகளை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதற்கான காரணங்கள்
    X

    துரித உணவுகளை சாப்பிடக் கூடாதுன்னு சொல்வதற்கான காரணங்கள்

    இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாக துரித உணவுகள் இருக்கின்றன. என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று அறிந்து கொள்ளலாம்.
    இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்சனைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

    பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
    ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

    எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.

    உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.

    இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.



    இன்று இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும்.

    பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய பன் போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுகிற பன்னைவிட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் பன் 3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், மட்டன், பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட்டாக சாப்பிடுகிறோம்.

    பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி (Cheese) கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன.

    உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதவர்களுக்கு இந்த குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பொதுவாக இருப்பதில்லை.

    இதன் காரணமாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்.
    Next Story
    ×