search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது
    X

    குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
    குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.

    குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.

    இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

    பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

    கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.



    குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.

    குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

    தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

    கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.

    குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

    விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.
    Next Story
    ×