search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களும், சமுதாய தொண்டும்
    X

    மாணவர்களும், சமுதாய தொண்டும்

    ஒவ்வொரு படித்த இளைஞனும், படிக்கும் மாணவனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை மேலான நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும்.
    மாணவர்களின் பொறுப்பு உண்மையில் மிகவும் கூடுதல் என்றால் மிகையாகாது. படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரியதே. இவை அனைத்தையும் விட சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும். ஒவ்வொரு படித்த இளைஞனும், படிக்கும் மாணவனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை மேலான நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். பின்னர் சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

    மனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக பணிகளில், ஏழை- எளியவர்களுக்கு உதவுவதில் முடிந்த வரை மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும்.

    துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இளமையிலேயே சிறந்து விளங்க வேண்டும்.

    மதுவின் தீமைகள் பற்றியும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். இளைஞர்களிடையே புகையிலை மற்றும் போதை பாக்குகள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சிலர் அதை இன்னும் பயன்படுத்திதான் வருகிறார்கள். இதன்மூலம் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு மாணவர்கள் எடுத்து கூற வேண்டும்.

    ஆபத்து காலங்களில் மட்டும் முன்நின்று உதவி செய்ய வேண்டும் என்றில்லாமல் ஆபத்து எந்த நிலையில் வந்தாலும் உதவி செய்ய முன்வர வேண்டும். சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



    தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும். மூட நம்பிக்கைகளை போக்கிட வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதனை போக்கிட முடியாத நிலைதான் இருந்து வருகிறது. மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர் மற்றும் இளைஞர் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி.

    சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படும் எண்ணம் மாணவர்களிடையே வளர வேண்டும்.

    தற்போது கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர். கொசு மூலம் ஏற்படும் இந்த நோய் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கி கூற வேண்டும். கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வேண்டும். குளம், குட்டைகளை தூர்வாரியும் ஆழப்படுத்தலாம். இதன்மூலம் மழை பெய்யும் போது மழைநீரை சேமிக்க முடியும்.

    வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் தினமும் கிடைக்கும் வருமானத்தை அன்றே செலவு செய்து விட்டு மறுநாள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். அவர்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும்.

    இவ்வாறு பல்வேறு சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    Next Story
    ×