search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
    X

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி, கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் விநாயகர், அஸ்திரதேவரும், மற்றொரு சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் எழுந்தருளினர்.

    இதைத்தொடர்ந்து பாடலீஸ்வரரின் தேரை கலெக்டர் அன்புசெல்வன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. தேரடித்தெருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கரநாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் 1.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இதில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர், அன்னதானம், சுண்டல், கேசரி ஆகியவற்றை வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வழியில் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, வேல்விழி, தலைமை எழுத்தர் ஆழ்வார், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நின்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியளவில் தேரில் இருந்து இறங்கிய பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு தேரடியில் மண்டகபடி பூஜையும், 8.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் 10-வது நாளான இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரியும், இரவு முத்து பல்லக்குகளில் ராஜவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    11-ம் நாள் விழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும், 12-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(திங்கட்கிழமை ) காலை 6.30 மணிக்கு அறுபத்து மூவர் தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும், 13-ம் நாள் விழாவான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது.
    Next Story
    ×