search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மிக மிக பழமையான அணி அண்ணாமலையார்
    X

    மிக மிக பழமையான அணி அண்ணாமலையார்

    கிரிவலம் செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அணி அண்ணாமலையார் ஆலயத்துக்கு செல்ல தவறுவது இல்லை. இந்த ஆலயமும் அண்ணாமலையார் ஆலயத்தை போன்றே மிக மிக பழமையானது.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்துக்கு உட்பட்டதாக மூன்று ஆலயங்கள் இருக்கின்றன. அணி அண்ணாமலையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், சஞ்சீவராயர் கோவில் ஆகியவையே அந்த மூன்று ஆலயங்கள் ஆகும். இதில் அணி அண்ணாமலையார் ஆலயம் திருவண்ணாமலையின் வடமேற்கு பகுதியில் கிரிவல பாதையில் அமைந்துள்ளது.

    கிரிவலம் செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அணி அண்ணாமலையார் ஆலயத்துக்கு செல்ல தவறுவது இல்லை. இந்த ஆலயமும் அண்ணாமலையார் ஆலயத்தை போன்றே மிக மிக பழமையானது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு முன்பே இந்த ஆலயம் உருவாகி இருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் விஷ்ணுவும், பிரம்மாவும் ஈசனின் அடிமுடி தேடி சென்ற கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதன் தொடர்ச்சியாக விஷ்ணுவும், பிரம்மாவும் திருவண்ணாமலையில் தவம் இருந்து ஈசனின் அருளை பெற்றனர். அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    விஷ்ணு பகவான் வழிபட்ட பகுதிதான் பிரதான அண்ணாமலையார் ஆலயமாக திகழ்வதாக சொல்கிறார்கள். அதுபோல பிரம்மா வழிபட்ட இடம் அணி அண்ணாமலையார் என்று வரையறுத்து உள்ளனர். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு தடவை பெண் ஒருத்தியை படைத்தார். அந்த பெண்ணுக்கு திலோத்தமை என்று பெயரிட்டார். திலோத்தமை மிக மிக அழகு நிறைந்தவள்.

    அவளது அழகுக்கு ஈடுஇணையாக பிரபஞ்சத்திலேயே யாரும் இல்லை என்று கூறப்பட்டது. அத்தகைய அபூர்வ அழகியான திலோத்தமை மீது அவளை படைத்த பிரம்மாவுக்கே மோகம் ஏற்பட்டது. திலோத்தமையை கவர பிரம்மா முயற்சி செய்தார். இதைக் கண்டு திலோத்தமை அதிர்ச்சி அடைந்தாள். அவள் பிரம்மாவிடம் இருந்து தப்பி ஓடினாள். பிரம்மாவும் அவளை விரட்டிச் சென்றார். இதனால் திலோத்தமை பல்வேறு வடிவங்களை எடுத்து தப்பினார். அந்த வடிவங்களையெல்லாம் கண்டுபிடித்த பிரம்மா தொடர்ந்து விரட்டியபடியே இருந்தார்.

    பிரம்மாவின் நெருக்கடி அதிகரித்ததால் திலோத்தமை ஈசனை சரண் அடைய முடிவு செய்தாள். இதற்காக அவள் திருவண்ணாமலை தலத்துக்கு வந்தாள். அங்கு எழுந்தருளி உள்ள அண்ணாமலையாரிடம் சென்று முறையிட்டாள். அவளது நிலை கண்டு அண்ணாமலையார் மனம் இரங்கினார். பிரம்மாவை தடுத்து நிறுத்திய அண்ணாமலையார் புத்திமதி தெரிவித்தார். படைக்கும் தொழிலில் இருக்கும் தாங்கள் இத்தகைய செயலில் ஈடுபடலாமா? என்று தெளிவுப்படுத்தினார். அதன் பிறகே தனது நிலையை உணர்ந்தார். சிவபெருமானின் அருளால் பிரம்மாவின் காமமோகம் விலகியது.

    தன்னை நெறிப்படுத்திய சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கவும், திலோத்தமை மீது மோகம் கொண்டதால் ஏற்பட்ட தோஷங்கள் விலகவும் திருவண்ணாமலையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட முடிவு செய்தார். அதன்படி தற்போது அணி அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    பல ஆண்டுகள் வழிபாடு, தவத்துக்கு பிறகு அவருக்கு சிவபெருமான் அருள்புரிந்தார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மிகப்பெரிய சிவாலயம் உருவானது. அதுதான் அணி அண்ணாமலை திருக்கோவில் ஆகும். கிழக்கே பிரதான கோவிலில் உள்ள லிங்கமூர்த்திக்கு அண்ணாமலையார் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பது போல மேற்கே உள்ள லிங்க மூர்த்திக்கு அணி அண்ணாமலையார் பெயர் சூட்டப்பட்டது.

    இத்தலத்து சிவபெருமானுக்கு அணி அண்ணாமலையார் என்று பெயர் சூட்டப்பட்டதால் அந்த இடமும் அணி அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மலைக்கு அணிகலன் போல இந்த ஆலயம் இருப்பதாலும் அணி அண்ணாமலை என்று அழைக்கப்பட்டது. அப்பர் தனது பாடல்களில் இந்த தலத்தை அணி அண்ணாமலை என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றும் சான்றோர்கள் இந்த தலத்தை அணி அண்ணாமலை என்றே அழைக்கின்றனர்.

    மலையே சிவமாக திகழும் திருவண்ணாமலை கிரிவல பாதையில் ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் வருண லிங்கம் அருகே அணி அண்ணாமலையார் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்துக்கு ஆதி அருணாசலேஸ்வரர் என்ற பெயரும் இருப்பதால் இந்த ஊரை ஆதி அண்ணாமலை என்றும் அழைத்தனர். அதுதான் நாளடைவில் பேச்சுவழக்கில் அடி அண்ணாமலை என்று மாறிப் போனது. தற்போது பெரும்பாலானவர்கள் அடி அண்ணாமலை என்றே அழைக்கிறார்கள்.

    இந்த தலத்தில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் நீண்ட காலம் தங்கியிருந்தார். அப்போதுதான் அவர் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் அனைவரும் எழுந்து குளித்து விட்டு ஈசனை வழிபட வாருங்கள் என்பதை உணர்த்தும் வகையில் மாணிக்கவாசகர் பாடல்கள் அமைந்துள்ளன.

    இத்தலத்தின் பெருமையை மேலும் சிறப்பு பெற செய்யும் வகையில் மாணிக்கவாசகர் தனது ஒரு பாடலில், “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியே” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இத்தலத்துடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்துள்ளார். அடி அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்பும் தெருவின் முனையில் மாணிக்கவாசகருக்கு தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்துக்கு மாணிக்கவாசகர் கிழக்கு பார்த்த முகமாக அண்ணாமலையாரை எப்போதும் வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

    இந்த கோவிலில் இறைவனின் திருநாமம் ஆத்மநாதர், அம்பாளின் திருநாமம் யோகம்பாள். இந்த ஆலயத்துக்கு அருகில் மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் உள்ளது. இந்த தீர்த்தக்குளத்தில் நீராடி விட்டு நோன்பு இருக்கும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருக்குளத்தின் ஓரத்தில் அமர்ந்து திருவெம்பாவை படித்தால் கூடுதல் பலன்களை பெறலாம். குறிப்பாக இளம்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.



    ஒரு மார்கழி மாதத்தில்தான் மாணிக்கவாசகருக்கு அண்ணாமலையார் காட்சி தந்து அருள் புரிந்தார். எனவே இத்தலத்தில் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தரும் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் ஆனி மாதம் மகம் நட்சத்திரம் தினம் மாணிக்கவாசகரின் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று இந்த ஆலயத்தில் குருபூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அன்று திருவெம்பாவை பாடல்கள் அனைத்தும் இத்தலத்தில் பாடப்படும். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் தீபாராதனை காட்டி பூஜை செய்வார்கள். இந்த பூஜையில் பங்கேற்றால் மாணிக்கவாசகர் பெற்ற பலன்களை நாமும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அணி அண்ணாமலையார் ஆலயத்துக்குள் சிவபெருமான் லிங்கமாக எழுந்தருளி இருந்தார். உண்ணாமலை அம்மன் தனி சன்னதியில் உள்ளார். ஆலயத்தின் வடக்கு பகுதியில் பழனி ஆண்டவர் சன்னதி உள்ளது. தெற்கு புறம் சம்பந்த விநாயகர் சன்னதி இருக்கிறது. மேலும் அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள சன்னதி அமைப்புகள் அனைத்தும் இந்த ஆலயத்திலும் இருக்கின்றன.

    அண்ணாமலையார் ஆலயத்தில் எத்தகைய பூஜைகள் நடத்தப்படுகிறதோ அதேபோன்று அணி அண்ணாமலையார் ஆலயத்திலும் பூஜைகள், வழிபாடுகள் உள்ளன. அண்ணாமலையர் ஆலயத்தில் வழிபடும் பக்தர்கள் அணி அண்ணாமலை ஆலயத்திலும் வழிபட்டால்தான் முழுமையான பலன்களை பெற முடியும் என்று சொல்கிறார்கள். இந்த ரகசியத்தை திருவண்ணாமலை தலத்தை நாடி வந்த மகான்கள், ரிஷிகள், சித்திகள், சித்தர்கள் அனைவரும் உணர்ந்து இருந்தனர். இதனால்தான் அண்ணாமலையார் ஆலயத்தை சுற்றி வந்த சித்தர்கள் ஒவ்வொருவரும் அணி அண்ணாமலையாரை நெருங்கவும் தவறவில்லை.

    இன்னும் சொல்லப்போனால் அணி அண்ணாமலையார் ஆலயத்துக்குள் மேலும் பல ரகசியங்கள் புதைந்து கிடப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், புதை பொருள் ஆய்வாளர்களும், தொல்லியல் நிபுணர்களும் கருதுகிறார்கள். அதை உறுதி செய்வது போல சில ஆண்டுகளுக்கு முன்பு அணி அண்ணாமலையார் ஆலயத்துக்குள் ஒரு ரகசிய சுரங்க பாதை கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சுரங்கப் பாதை மலையின் நடுப்பகுதி வரை செல்வதாக கூறப்பட்டது. இதனால் பரபரப்பு எழுந்ததால் அந்த சுரங்க பாதையை மூடி விட்டனர். இதன் மூலம் அணி அண்ணாமலையார் ஆலயத்துக்கும், மலைக்கும் முக்கிய தொடர்பு இருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய அணி அண்ணாமலையார் ஆலயத்துக்குள் சென்றாலே ஒரு அதிர்வு ஏற்படுவதாக பெரும்பாலான பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பிறப்பின் ரகசியத்தையும் ஆன்ம பயணத்தையும், ஆன்ம ஞானத்தையும் இந்த தலத்தில் நிறைய மகான்கள் பெற்றுள்ளனர். எனவே அணி அண்ணாமலையார் ஆலயத்தை ஒதுக்காதீர்கள். அவசியம் சென்று தரிசித்து பலன் பெறுங்கள்.

    அதுபோல திருவண்ணாமலையில் உள்ள கிராம தேவதை ஆலயமான துர்க்கையம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபடுங்கள். கார்த்திகை திருவிழாவின்போது இந்த அம்மனுக்குதான் முதலில் பூஜை நடத்தப்படுகிறது. மகிசாசூரனை அழித்த அம்பிகை வீற்றுள்ள இந்த தலத்துக்கு சென்றால் நமது பாவங்கள் அனைத்தும் அழிப்பதாக ஐதீகம் உள்ளது.

    இதைத் தொடர்ந்து அயன்குளம் அருகே உள்ள சஞ்சீவராயர் கோவிலுக்கும் சென்று வாருங்கள். இங்கு மூலவராக சஞ்சீவராயர் உள்ளார். திருவண்ணாமலை தலத்துடன் புராண ரீதியாக இந்த ஆலயத்துக்கும் தொடர்பு உண்டு. அந்த பகுதியில் உள்ள இந்திர தீர்த்தத்தில் நீராடி விட்டு வழிபட்டால் அதிக பலன்களை சஞ்சீவிராயர் தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    Next Story
    ×