search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்
    X

    கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்

    உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
    சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார்.

    இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இறந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.

    அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு ஆகும். அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கி.பி.1788- 1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர்.

    அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
    Next Story
    ×