search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகனுக்கு காவடி எடுத்தால் காரியங்கள் கைகூடும்
    X

    முருகனுக்கு காவடி எடுத்தால் காரியங்கள் கைகூடும்

    பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.
    வேலன் வெறியாட்டு நிகழ்வில் முருகப்பெருமானை மலைக்கடவுளாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை’ என்று நினைத்து திருவிழாக்காலங்களில் காவடி எடுத்து ஆடி வருவது முருக பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் விரதம் இருந்து, ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி அலகு மற்றும் நாக்கில் வேல் குத்தியும், அன்னதானம் வழங்கியும், மாடு, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    கொற்றவையின் செல்வன் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிலும் கந்தன், சுப்ரமணியன், கார்த்திகேயன் என பல்வேறு பெயர்களில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த கடவுளாக உள்ள முருகப்பெருமானை இந்த தை மாதத்தில் விரதமிருந்து, காவடி எடுத்து, காவி உடை மற்றும் ருத்ராட்சை மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை போற்றி கீர்த்தனைகள் பல பாடி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    10 நாட்கள் நடக்கும் இந்த தைப்பூச திருவிழாவின் போது யாத்திரை நிகழ்வு, தீர்த்தம் ஆடல், தர்ம காரியங்கள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடைபெறும். நாட்டுப்புற மக்கள் இந்த திருவிழாவை ‘தேர் நோம்பு’ என குறிப்பிடுகின்றனர். பாதயாத்திரையாக வந்து முருகனின் தாள்பணிந்து வணங்கினால் வாழ்வும் செழிப்படையும், நினைத்த காரியமும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள்.

    பக்தர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் முகம், அறியாமையை நீக்கி அறிவை நிலை நிறுத்தும் முகம், அடியவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிக்கொணரும் முகம், யாகங்களை காக்கும் முகம், நல்லவர்களை காத்தும், தீயவர்களை தண்டிக்கும் முகம், பக்தர்களிடம் அன்பு காட்டி அருளும் மற்றொரு முகம் என்று ஆறுமுகங்களை கொண்டு அருளாட்சி செய்பவர் முருகப்பெருமான் ஆவார்.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று முருக திருவிழா முருகனின் அறுபடைவீடுகளிலும் நடைபெறுகிறது. இவ்விழா பழனி முருகன் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் உமா தேவியார் தனது மகன் முருகனுக்கு வேலினை எடுத்துக் கொடுத்து ‘தாரகன்’ எனும் அரக்கனை வென்று வரும்படி அனுப்பிய நிகழ்ச்சியே தைப்பூச விழாவாக கொண்டாடப்படும்.

    யோகிகளுக்கு பழனியாண்டியாகவும், கடவுளர்களுக்கு தேவசேனாதிபதியாவும், குழந்தைகளுக்கு குழந்தை வேலனாகவும், பாலசுப்ரமணியனாகவும், ஞானம் வேண்டுவோருக்கு சுவாமி நாதனாகவும், இல்லறத்தாருக்கு வள்ளி-தெய்வானையாகவும், துறவிக்கு பழனியாண்டவனாகவும், அருள்பாலிக்கிறார். இந்நாளில் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! என்ற முழக்கத்தோடு வந்து தண்டாயுதபாணியின் திருவருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.
    Next Story
    ×