search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்
    X

    இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்

    இடும்பனை வணங்கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும். அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.
    இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம். இந்த இடும்பன் தான் பழனி படைவீடு தோன்ற காரணமாக இருந்தான்.

    எனவே தான் என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்குவோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும் என்று முருகனே கூறி உள்ளார். ஆனால் பழனி செல்பவர்களில் பலர் இடும்பனை கண்டு கொள்வதில்லை.

    இடும்பனை வணங்கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும். அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.

    முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில் ஆசிரியனாகத் திகழ்ந்தவர் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். அகத்தியர் தனது பூஜைக்காக சிவசக்தி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் சக்தி மலை ஆகியவற்றை முருகப்பெருமானிடம் கேட்டார். முருகப்பெருமானும் அவற்றை கொடுத்தார்.

    அந்த இரு மலைகளையும் பூர்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர். எதிர்பாராத விதமாக அவர் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது.

    இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். இடும்பன் அசுரனாக இருந்த போதிலும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், பூர்சவனத்தில் உள்ள சிவமலை, சக்திமலையை பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்கும் என்றார்.

    இடும்பனும் அவனது மனைவி இடும்பியும் அங்கு சென்று அம்மலையை தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர். அப்போது நீண்ட கம்பு ஒன்று தோன்றியது. சிவன் அருளால் நாலா பக்கங்களில் இருந்து நாக பாம்புகளும் அங்கே வந்தன. அந்த பாம்புகளை கம்பில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்த படி பொதிகை வரும் வழியில் திரு ஆவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான்.

    இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கினான். அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்று விளையாடிக்கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான்.

    மலையில் இருந்து இறங்கி விடும்படி சொன்னான். அந்த சிறுவன் இறங்க மறுத்ததுடன் “இது நான் தங்கப் போகும் மலை” என்ற வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச்சிறுவன் தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத்தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான்.

    இதைகண்டு அவன் மனைவி இடும்பி கதறினாள். அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லும் தகுதி, அசுரர்களை வென்ற அந்த முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள். அச்சிறுவன் மயில மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி அருள் புரிந்தான்.

    “இடும்பா இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். நீ இந்த இரு மலைகளையும் தோளில் சுமந்து வந்தது போல எனக்குரிய வழிபாட்டு பொருட்களை பக்தர்கள் காவடியாக கொண்டு வர வேண்டும். உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும். உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார்கள் என்றார். இதனால் இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் பறந்தோடி விடும். கடந்த 2000-ம் ஆண்டு பழனிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது. 540 படிகள் ஏறி இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும்.

    அப்படியானால்தான் முருகனை வழிபட்ட முழு பலனும் கிடைக்கும். பழனி பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டல் தொலைவில் இடும்பன் மலை உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடும்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து இருக்கும்.
    Next Story
    ×