search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யானை, சிலந்தியின் பக்தியை சோதிக்க இறைவன் நடத்திய திருவிளையாடல்
    X

    யானை, சிலந்தியின் பக்தியை சோதிக்க இறைவன் நடத்திய திருவிளையாடல்

    இறைவன் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில் திருவானைக்காவல் திருத்தலத்திலும் இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தி உள்ளார்.
    தனது பக்தர்களின் உண்மையான மனநிலையை அறிய திருவிளையாடல் நடத்துவது சிவனுக்கு கைவந்த கலை. பாண்டிய மன்னனின் அரசவையில் நக்கீரனுடன் நடத்திய சொற்போர், இசையில் வல்ல ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க விறகு வெட்டியாக அவதாரம் எடுத்தது, கண்ணில் ரத்தம் கசிய வைத்து வேடனுக்கு அருள்பாலித்து கண்ணப்ப நாயனாராக்கியது, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கியது என இறைவன் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

    அந்த வகையில் திருவானைக்காவல் திருத்தலத்திலும் இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தி உள்ளார். புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒருவர் யானையாகவும், இன்னொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் தும்பிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை தினமும் அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.

    தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் தும்பிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்தியை மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

    சோழ மன்னன் கட்டிய 70 சிவாலயங்களில் முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இக்கோவிலின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும், பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    Next Story
    ×