search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூவசரங்குப்பம் என்று பெயர் வரக்காரணம்
    X

    பூவசரங்குப்பம் என்று பெயர் வரக்காரணம்

    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பூவசரங்குப்பம் என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள்.

    தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர். அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால்இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஒரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார்.

    பகவானுடைய கோபத் தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணைகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

    பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில்களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர்.

    ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார்.

    இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் “நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.

    அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது.

    அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.
    அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

    ஆணுக்கு பெண் சமம்

    நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.

    Next Story
    ×