search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, நேற்று மாலை 4 மணி முதல் 4-45 மணி வரை மகர லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர்யாதவ், முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குவதற்காக ஆந்திர-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பகல் 1 மணிக்கு கார் மூலம் திருமலைக்கு வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு ஆந்திர மாநில அரசு சார்பில், மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்றார். சந்திரபாபுநாயுடுவுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதான அர்ச்சகர்கள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவுக்கு பரிவட்டம் கட்டினர்.

    பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்களை ஒரு வெள்ளித்தட்டில் வைத்து, திருமலையில் உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை மேள தாளம் முழங்க முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தனது தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக வந்து மூலவர் வெங்கடாஜலபதியின் பாதத்தில் வைத்து, பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டார். பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு தீர்த்த பிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவரான மலையப்பசாமி தங்க, வைர அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 17-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரை கருடசேவை நடக்கிறது. 18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டம், 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், 21-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து 7.30 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    Next Story
    ×