search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலையில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை
    X

    திருவண்ணாமலையில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை

    மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.
    திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் பிரமோற்சவங்களில் ஆனி மாதம் நடத்தப்படும் தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம் மிகவும் முக்கியமானது. இந்த பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். ஆதிகாலத்தில் திருவண்ணாமலையில் இந்த பிரமோற்சவம்தான் மிக மிக விமரிசையாக நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

    கார்த்திகை தீப திருவிழாவை விட ஆனி மாத தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம்தான் அதிக சிறப்பாக நடந்ததாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு கொண்ட தட்சிணாயண பிரமோற்சவம் இந்த ஆண்டு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. காலை-மாலை இரு நேரமும் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.

    நாளை (13-ந்தேதி) வெள்ளிக்கிழமை இந்த பிரமோற்சவத்தின் 7-ம் நாள் திருவிழா ஆகும். திங்கட்கிழமை (16-ந்தேதி) தட்சிணாயண பிரமோற்சவத்தின் 10-ம் நாள் திருவிழா நடைபெற உள்ளது. அன்று உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் அய்யங்குளத்துக்கு சென்று தீர்த்தவாரி செய்வார். இதையடுத்து அவரது வீதிஉலா நடைபெறும். மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்துவார்கள்.

    அதே தினத்தன்று மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடைபெற உள்ளது. நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலையில் தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது.

    திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்துள்ளனர். அவர்களில் மாணிக்கவாசகருக்கு தனி இடம் உள்ளது. அதற்கு காரணம் திருவண்ணாமலை தலத்தில் அவர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள்தான்.

    9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் மதுரை அருகே திருவாதவூரில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு திருவாதவூரார் என்றே பெயரிட்டனர். இளம்வயதிலேயே தமிழ் பக்தி இலக்கியத்தில் புலமை பெற்றிருந்த அவரது புகழ் நாடெங்கும் பரவியது. அந்த சமயத்தில் மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.

    அவன் திருவாதவூராரின் திறமையை அறிந்து அவரை அழைத்து தலைமை அமைச்சராக நியமித்தான். ஒரு தடவை சோழநாட்டில் குதிரைகள் வந்திருப்பதாக அறிந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அந்த குதிரைகளை வாங்குவதற்காக திருவாதவூராரிடம் நிறைய பொற்காசுகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.

    சோழ நாட்டுக்கு புறப்பட்டு சென்ற திருவாதவூரார் அறந்தாங்கி அருகே உள்ள திருபெருந்துறையை அடைந்ததும் அங்குள்ள ஒரு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குரு வடிவம் எடுத்து அமர்ந்து இருப்பதை கண்டார். உள்ளம் உருகிய திருவாதவூரார் தன் கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் அங்கு சிவாலயம் கட்டுவதற்கு செலவழித்தார். அதோடு சிவபெருமான் மீது நிறைய பாடல்களையும் பாடினார்.

    அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் அவரது பெயர் மாணிக்கவாசகர் என்று மாறியது. இதற்கிடையே குதிரை வாங்க சென்ற அமைச்சரை காணவில்லையே என்று படை வீரர்களை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அனுப்பி வைத்தான். அந்த படை வீரர்கள் திரும்பி வந்து திருவாதாவூரார் குதிரை வாங்கவில்லை, பொற்காசுகளை எல்லாம் சிவாலயம் கட்ட செலவழித்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதனால் கோபம் அடைந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை இழுத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி மாணிக்கவாசகர் மதுரைக்கு இழுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் சிவனை நோக்கி மனமுருக வேண்டினார். தனது பக்தன் கஷ்டப்படுவதை கண்ட சிவபெருமான் அவரை மீட்க திருவிளையாடல் நடத்தினார்.

    நிறைய நரிகளை பரி(குதிரை)களாக மாற்றி அனுப்பினார். அதை உண்மை என்று நம்பிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் உடனே மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். ஆனால் அன்று இரவே பரிகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறின. இதை கண்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன் கோபத்துடன் மாணிக்கவாசகரை தண்டித்தான். அப்போதும் சிவபெருமான் திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரை மீட்டார்.

    பிறகு மாணிக்கவாசகரிடம் இனி நீங்கள் ஆலயம் ஆலயமாக சென்று திருப்பணி செய்யும்படி சிவபெருமான் உத்தரவிட்டார். அதை ஏற்று மாணிக்கவாசகர் தல யாத்திரை புறப்பட்டார். அவர் எந்தெந்த ஆலயங்களுக்கு செல்கின்றாரோ அங்கெல்லாம் பாடல்கள் பாடினார்.

    1. நமச்சிவாய வாழ்க என தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4.குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து, 6. ஆசைப் பத்து, 7. வாழப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட்பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம்,14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம், 21. திருச்சதகம், 22. நீத்தல் விண்ணப்பம், 23. திருப்புலம்பன், 24. பிடித்த பத்து ஆகியவற்றை படைத்தார். இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் அனைத்தும் படித்து படித்து இன்புற தக்கவையாகும்.



    பாண்டிய நாடு, சோழ நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இந்த பாடல்களை அவர் பாடி இருந்தார். அங்கு தல யாத்திரை முடித்து விட்டு விருத்தாசலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார்.

    வைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.

    ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார்.

    அந்த பாடல்களை திருவண்ணாமலையில் உள்ள பெண்கள் பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில்தான் திருவண்ணாமலையில் தற்போது அவருக்கான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    அந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தந்த விழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆனி மாதம் மகம் நட்சத்திரம் நாளில் மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடத்தப்படுகிறது. அன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    இந்த ஆண்டுக்கான மாணிக்கவாசகர் குரு பூஜை வருகிற திங்கட்கிழமை (16-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாரதனை காட்டப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் அபரிமிதமான பலன்களை பெறலாம்.
    அன்றைய தினம் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையை அந்த தலத்தில் அமர்ந்து பாடி சிவனையும், பார்வதியையும் வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

    மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் வரிசையில் நால்வர்கள் சிலைகள் தனியாக உள்ளன. அங்கு இடம் பெற்றுள்ள மாணிக்கவாசகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அன்று காலை சிறப்பு ஆரத்தி நடைபெறும்.

    திருவண்ணாமலை தலத்தில் சில ஆண்டுகள் இருந்த பிறகு மீண்டும் தல யாத்திரையை தொடங்கிய மாணிக்கவாசகர் பல்வேறு ஆலயங்களுக்கு சென்றார். இறுதியில் அவர் தனது 32-வது வயதில் சிதம்பரத்தில் நடராஜருடன் ஐக்கியம் ஆகி விட்டார். ஞானநெறியை பின்பற்றிய மாணிக்கவாசகர் இறைவனுக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை.

    சிதம்பரத்தில் அவர் சொல்ல சொல்ல சிவபெருமானே ஓலைச் சுவடிகளில் பாடல்களை எழுதினார். அந்த பாடல்களின் முடிவில் “மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன்” என்று சிவபெருமான் கையெழுத்திட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவைதான் திருவாசகமும், திருக்கோவையுமாகும்.

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். அந்த மகிமையும் சிறப்பும் பெருமையும் மாணிக்கவாசகருக்கு உண்டு. மாணிக்கவாசகர் மொத்தம் 656 பாடல்கள் பாடினார். அந்த பாடல்களின் கூட்டு தொகை 8 ஆகும். அதனால்தான் என்னவோ திருமுறை நூல்களில் 8-ம் திருமுறையாக மாணிக்கவாசகரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன. எனவே மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.

    திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களில் 99 சதவீதம் பேர் மாணிக்கவாசகர் பற்றி தெரிந்தும், தெரியாதது போல, மாணிக்கவாசகர் ஆலயத்தை கடந்து சென்று விடுகிறார்கள். இனியாவது அண்ணாமலையார் புகழ் பாடிய மாணிக்கவாசகருக்கு மரியாதை செலுத்துங்கள்.
    Next Story
    ×