search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சி காமாட்சி கரும்பு
    X

    காஞ்சி காமாட்சி கரும்பு

    காஞ்சி காமாட்சி கையில் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. அந்த சூட்சுமம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அன்பின் கடவுளான மன்மதனிடம் தான் கரும்பு வில்லும் ஐவகை மலர் அம்புகளும் இருக்கும். ஆனால், காஞ்சி காமாட்சியும் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது.

    அன்பும் பாசமும் எப்போதும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கவே மன்மதனிடம் இருந்து அன்னை கரும்பு வில்லை வாங்கி வைத்திருக்கிறாள் என்று காஞ்சி மகாபெரியவர் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல மன்மதனை சிவனார் எரித்த பிறகு, சக்தியின் வேண்டுதலுக்காக மன்மதனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக மாற்றினார்.

    ஆனாலும் மன்மதன் எல்லை மீறாமல் இருக்கவும், தர்மநெறி தவறாமல் வாழும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தன் திருக்கரத்தில் கரும்பை ஏந்தியபடி காட்சி தருக்கிறார். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் காமாட்சியின் கையில் இருக்கும் கரும்பு வில்லோ, காமத்தை அடக்கி ஆன்மீகத்தில் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் இருக்கும் காயத்ரி மண்டபத்தின் மையப் பகுதியில் காமாட்சி அன்னை எழுந்தருளி உள்ளாள்.

    காமாட்சி இவ்விடத் தில் பத்மாசனக் கோலம் கொண்டவளாக இருக் கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசி வன் ஆகிய ஐந்துவித பிரம் மாக்களையும் தனக்கு ஆசனமாய்க் கொண்டவள்.

    காமாட்சி தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு வில் ஆகிய நான்கு ஆயுதங்களை ஏந்தி இருக்கிறாள். காமாட்சிக்கு ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி, ஸ்ரீசக்கர நாயகி, காமேஸ்வரி என பல பெயர்கள்உண்டு.

    பந்தகாசுரன் மற்றும் பண்டாசுரன் ஆகியோரின் கொடுஞ்செயல்களையும் அவர்களையும் அழித்திட வேண்டி ஸ்தல விருட்சமான செண்பக மரத்தினில் கிளி வடிவுடன் காமாட்சி வாசம் செய்தாள். அதனால் காமாட்சி அன்னையை இத்தலத்தில் எவரும் பிரதிஷ்டை செய்யவில்லை. இத்தலத்தில் காமாட்சி அம்மன் சுயம்புவாக வளைப்புற்றான பிலாகாசத்தில் இருந்து தானே தோன்றினாள்.

    காமாட்சிக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவை ஸ்தூல வடிவம், சூட்சும வடிவம், காரண வடிவம் எனப்படும். ஸ்தூல வடிவில் அன்னை தன் பக்தர்களுக்கு தனது தரிசனத்தாலேயே சர்வ காமங்களையும் தனது கடாட்சத்தால் கோடி கோடியாக அருள்வதால் காமகோடி காமாட்சி என்னும் பெயரைப் பெற்று அருள்பாலித்து வருகின்றாள்.

    காமாட்சி ஆலயத்தில் காயத்ரி மண்டபத்தில் உள்ள அம்பாளின் சந்நிதிக்கு எதிரில் காமகோடி பீடமான ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் தான் மந்திர ரூபம் கொண்டு விளங்குகிறாள்.

    அன்னையின் பீடத்தின் கீழாகத்தான் ஸ்ரீ சக்கரம் அனைத்து ஆலயங்களிலும் அமைத்திடுவது வழக்கம் ஆகும். ஆனால் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் உக்கிரம் தணித்திட வேண்டிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவாலயத்திலும் அம்பாளுக்கென தனி சந்நிதி கிடையாது.

    காமாட்சி அம்மன் ஆலயமே அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சந்நிதியாக விளங்குகிறது. பீடத்தின் மையத்தில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி அஷ்ட சக்திகளும் உள்ளனர். அன்னை என்று வளைப் புற்றில் இருந்து சுயம்பு வடிவாய் எழுந்தருளினாளோ அன்று தொட்டு ஸ்ரீ சக்கரமானது இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

    நீண்ட காலமாக பற்பல மகான்களால் இப்பீடம் பூஜித்து வரப்பட்டுள் ளது. இன்றுவரை ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டும் விளங்கி வருகின்றது. சர்வேஸ்வரனே தேவியின் அருள் பெறவேண்டி நான்கு யுகங்களிலும் இந்த பீடத்தில் துர்வாச முனிவராகவும், பரசுராமராகவும், தவும்யராகவும் கலியுகத்தில் முகாசாரியராகவும், ஆதிசங்கரராகவும் அவதாரம் செய்ததோடு அந்தந்த யுகங்களில் ஸ்ரீ காமகோடி பீடத்தினை சீரமைப்பு செய்ததோடு பூஜை செய்தும் அம்பிகையின் அருளப் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.
    Next Story
    ×