search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆத்ம ஞானம் அருளும் லலிதா சகஸ்ரநாமம்
    X

    ஆத்ம ஞானம் அருளும் லலிதா சகஸ்ரநாமம்

    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார்.
    லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:-

    “ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது. காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும். நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.

    ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும். கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.

    ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது. ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.

    நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.

    தேவி ஸஹஸ்வ நாமங்களில் சிறந்தது பத்து:- கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.

    அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்” என்றார்.
    Next Story
    ×