search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவையொட்டி கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
    X
    விழாவையொட்டி கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கியது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை.

    இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 5 நாள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை கடந்த 19-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    அன்று இரவு அத்தாழ பூஜைக்குப்பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது சன்னிதானத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “சாமியே சரணம் ஐயப்பா“ என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.


    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவையொட்டி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    விழா நாட்களில் தினமும் மதியம் உற்சவ பலி பூஜை நடைபெறும். விழாவையொட்டி, சன்னிதானம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியாக 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு சுவாமி ஐயப்பன் விக்ரகத்துக்கு ஆறாட்டு வைபவம் நடக்க உள்ளது.

    ஆறாட்டு நிறைவு பெற்றதும் மீண்டும் மேளதாளம் முழங்க சாமி விக்ரகம் சன்னிதானத்துக்கு பவனியாக கொண்டு வரப்படும். பின்னர் கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறும்.

    தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

    பங்குனி உத்திர ஆறாட்டு விழாவையொட்டி, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், செங்கனூர், பத்தினம்திட்டை, கொல்லம், கோட்டயம், கொட்டாரக்கரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து கேரள அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×