search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோலில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    X
    காரைக்குடி முத்துமாரியம்மன் கோலில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்குடி, மீனாட்சிபுரத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா காரைக்குடி பகுதி மக்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்கு வருகிறார்களோ இல்லையோ, இந்த திருவிழாவிற்கு உலகெங்கும் உள்ள காரைக்குடியை சேர்ந்த மக்கள் வருகை தருவார்கள்.

    இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி காலை 4 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கணபதி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 6.50 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போதே காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


    விரதம் இருக்க உள்ள பக்தர்கள் தங்களது கையில் காப்புக்கட்டிக்கொண்டனர்.

    முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காரைக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். வீட்டுக்கு ஒருவராவது பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் குடும்பம், குடும்பமாக ஏராளமானோர் மஞ்சள் ஆடை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். விழாவில் வருகிற 20-ந்தேதி கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 21-ந்தேதி காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குட ஊர்வலம் நடைபெற உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், மறுநாள்(23-ந்தேதி) சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், கணக்காளர் அழகுபாண்டி ஆகியோர் செய்துள்ளனர். இந்த திருவிழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் காரைக்குடி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×