search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்த போது எடுத்த படம்.
    X
    கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்த போது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 8-வது நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதல் உள்ளூர் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் அம்மனை கும்பிட்டு பொங்கல் வழிபாடு நடைபெறும் இடத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். நேற்று கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் கடற்கரையில் உயரமான மேடை அமைத்து கண் காணிப்பு பணியில் ஈடு பட்டனர்.

    விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி அலங்கார பவனி போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் நடைபெறும். தொடர்ந்து 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, குத்தியோட்டம் போன்றவை நடக்கிறது.

    காலை 11 மணிக்கு அன்னதானம், 11.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மதியம் 1 மணிக்கு குமரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இந்து மாணவ-மாணவிகளுக்கும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார்.


    மண்டைக்காடு கடற்கரையில் பக்தர்கள் குவிந்து இருப்பதையும், போலீசார் உயரமான மேடை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சமயமாநாடு போன்றவை நடக்கிறது. 8 மணிக்கு இன்னிசை விருந்து, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும்.

    நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது. முன்னதாக பூஜையின் சிறப்பு அம்சமாக 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படும். பின்னர், மண்டைகாடு சாஸ்தா கோவில் அருகில் இருந்து ஒடுக்கு பூஜை பவனி தொடங்கும். இந்த பவனியில், பூஜைக்கு எடுத்து வரப்படும் உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருவார்கள்.

    பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. இதனிடையே கும்பளங்காய், மஞ்சள் நீர், சுண்ணாம்பு, பூ ஆகியவை பொருட்களால் குருதி கொடுக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடைபெறும்.

    ஒடுக்கு பவனியின் போதும், பூஜை நடைபெறும் போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் எந்தவித ஓசையும் இன்றி அமைதியாக காணப்படும்.

    இந்த பூஜையை காண குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
    Next Story
    ×