search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    சிவலிங்கங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரியகோவிலின் 214 அடி உயர விமான கோபுரம் சுத்தப்படுத்தப்படுகிறது

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலின் 214 அடி உயர விமான கோபுரம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு சுத்தப்படுத்தப்படுகிறது.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

    இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் கேரளாந்தகன் கோபுரம் உள்ளது. அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 214 அடி உயர விமான கோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன், ராஜராஜன், விமான கோபுரம் அனைத்தும் கடந்த 2008-ம் ஆண்டு புதுப்பிக்கும்பணி நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த பாசிகள், அழுக்குகள், பறவைகளின் எச்சம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் சுதை வேலைகள் நடைபெற்றன.


    தஞ்சை பெரிய கோவிலின் 214 அடி உயர விமான கோபுரத்தை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து கோவிலில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கத்தை யாரும் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் உயரம் 3 அடியாக இருந்ததால் பக்தர்கள் அதன் உள்ளே சென்று விடுகின்றனர். அதனால் தடுப்புகளை உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்திய தொல்லியல் துறையினர் தற்போது 6 முதல் 6½ அடி உயரம் வரை மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து வருகின்றன. மேலும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் வகையில் ஆங்காங்கே கதவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம், வடக்கு திருச்சுற்று மண்டபம், மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்படுகின்றன.

    இதன் அடுத்த கட்டமாக 214 அடி உயர விமான கோபுரம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் விமான கோபுரமும் அதைத்தொடர்ந்து மற்ற கோபுரங்களும் சுத்தம் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த மாதத்தில்(ஏப்ரல்) தொடங்கப்பட உள்ளது. இதனை இந்திய தொல்லியல் துறையில் உள்ள வேதியியல் பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.


    கோவிலின் தரை தளங்கள் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

    பெரியகோவில் வளாகத்தில் அமைந்துள்ள தரைதளம் சிதிலமடைந்தும், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டும் காட்சி அளிக்கிறது. இதையடுத்து தரைதளத்தில் உள்ள செங்கல்களை மாற்றி புதிதாக தரைதளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளும் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

    பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக கல்லினால் செய்யப்பட்ட இருக்கைகளும் புதிதாக அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு சன்னதி அருகிலும் அந்த தெய்வத்தின் பெயர் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய பலகை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வைக்கப்பட உள்ளது. குப்பைகளை போடுவதற்காக கல்லினால் ஆன குப்பைத்தொட்டிகளும் வைக்கப்படுகிறது. பெரியகோவில் பற்றி விளம்பர பலகைகளும் பல்வேறு இடங்களில் வைக்கப் படுகிறது.

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், “பெரியகோவிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தையும் 2018-19-ம் ஆண்டிற்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது திருச்சுற்று மண்டபத்தில் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியகோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புல் தரைகள், பூங்காவையும் சீர் செய்து பராமரிக்கப்பட உள்ளது”என்றனர்.
    Next Story
    ×