search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளமேகப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    காளமேகப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    மதுரையை அடுத்துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா வருகிற 1-ந்தேதி முதல் நடக்கிறது.
    108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகில் உள்ள திருமோகூரில் பிரசித்தி பெற்ற காளமேகப் பெருமாள் கோவில். இங்கு தனிச்சன்னதியில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். பல்வேறு பரிகாரத்தலமாகவும் திருமோகூர் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம். அதில் கஜேந்திர மோட்ச திருவிழா முக்கியம் வாய்ந்தது.

    இந்த வருடத்திற்கான கஜேந்திர மோட்ச திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு பெருமாள் கள்ளர் திருக்கோலத்திலிருந்து புறப்பட்டு, கோவில் எதிர்புறம் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி திருமோகூர் அருகில் நரசிங்கத்தில் உள்ள யோக நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அமைத்துள்ள மண்டகப்படிகளில் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் தைலக்காப்பாகி உலா வந்து, யோக நரசிங்கப்பெருமாள் சன்னதியில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மறுநாள் 2-ந்தேதி அதிகாலை பெருமாள் கருட வாகனத்தில் திருக்கோவில் தெப்பக்குளத்திற்கு எதிரில் உள்ள கஜேந்திர மோட்ச மண்படபத்தில் கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சம் வழங்குகிறார்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்டு காலை 5 மணிக்கு ஒத்தக்கடையில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து 6 மணிக்கு அங்கிருந்து புறப்படாகி, காலை 9 மணிக்கு திருமோகூர் திருக்கோவிலுக்கு வந்தடைகிறார். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மேலும் பெருமாளை மண்டகப்படிகளில் எழுந்தருள செய்வதற்கு, திருக்கண் காணிக்கையாக மண்டகப்படி அமைக்கும் பக்தர்கள் வருகிற 28-ந்தேதிக்குள் பணத்தை திருக்கோவில் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மேலும் 16 அடி உயரத்தில் மண்டகப்படிக்கு தகர கொட்டகை அமைக்க வேண்டும் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×