search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நாளை தொடங்குகிறது
    X

    திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நாளை தொடங்குகிறது

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா நாளை(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டிற்கான விழா நாளை(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கல் மண்டபத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது.

    பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் காலையில் திருவிழா நிகழ்ச்சியும், இரவு சிம்ம, அனுமன், கருடசேவை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    வருகிற 26-ந்தேதி இரவு திருவீதி உலா புறப்பாடு , ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந்தேதி சாமி வீதி உலாவும், 28-ந்தேதி காலை சாமி புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் மாதம் 1-ந்தேதி காலை சாமி வெண்ணை தாழி சேவை புறப்பாடும் , பகல் 12.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ந்தேதி காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பகலில் தெப்பம் சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு மின்னொளியில் தெப்பம் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற தெப்பக்குளத்தின் கரையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
    Next Story
    ×