search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 18-ந்தேதி தெப்பத்திருவிழா
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 18-ந்தேதி தெப்பத்திருவிழா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா 18-ந்தேதி தொடங்குகிறது. 25-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 18-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 6.40 மணிக்குள் நடைபெறுகிறது.

    18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்படுகிறார். காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வருகிறார். இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மூலஸ்தான சேவைக்கு காலை 7.45 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

    தெப்ப திரு விழாவின் இரண்டாவது நாளான 19-ந்தேதி முதல் நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். அன்றைய தினம் அனுமந்த வாகனத்திலும், 20-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 21-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 22-ந்தேதி இரட்டை பிரபையிலும், 23-ந்தேதி தோளுக்கினியானில் புறப்பாடாகி யானை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். 24-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி இரவு 9 மணிக்கு நெல்லளவு கண்டருள்கிறார்.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப திருநாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு உபய நாச்சியார்களுடன் புறப்படும் நம்பெருமாள் 5 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 26-ந்தேதி மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    தெப்ப திருவிழாவையொட்டி 18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அதிகாலையில் மூலஸ்தானத்தில் நடைபெறும் விஸ்வரூப சேவை கிடையாது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×