search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரியனை வழிபட்டு பலன் பெற்றவர்கள்
    X

    சூரியனை வழிபட்டு பலன் பெற்றவர்கள்

    சூரிய பகவானை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளமானோர். அவர்களில் முக்கியமானவர்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பன் தன் தந்தையால் சாபம் பெறும் நிலைக்கு ஆளானான். அதன் விளைவால் சாம்பன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். மகன் படும் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணர், சாம்பனுக்கு சாபவிமோசனம் பெறும் வழியைக் கூறினார். அதன்படி காசிக்கு வந்த சாம்பன் அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் சாம்பாதியர் என்று அழைக்கப்படுகிறார். சாம்பன் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு புனிதம் அடைந்த நாள் தைப்பொங்கல் என்று புராணம் கூறுகிறது.

    காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் கருடனும் ஒருவர். இந்த கருடன், அளப்பரிய சக்தியை பெறுவதற்காக தன் தாய் வினதையுடன் பகவானை வழிபட்டு பலம் பெற்றார்.-அதன் விளைவாக மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் திகழ்கிறார் என்பது புராணம். தாயும், மகனும் வழிபட்ட சூரிய பகவனை ‘சுஷோல்கா ஆதித்யர்’ என்று போற்றுவர். காசியில் புகழ்பெற்ற ஸ்ரீதிரிலோசனர் மற்றும்-ஸ்ரீகாமேஸ்வரர் ஆலயப் பிரகாரத்தில் இந்த சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார்.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்ட விமலன் என்பவன், ஒரு முனிவரை சந்திக்கும் பாக்கியத்தை பெற்றான். அவன் நிலையை அறிந்த முனிவர், ‘நீ காசியில் சிவலிங்கம் நிறுவி சூரிய பகவானை வழிபட்டால்-உன் துன்பம் நீங்கும்’ என்று ஆலோசனை சொன்னார். முனிவர் சொன்னதுபோல் காசிக்கு வந்த விமலன், சிவலிங்கத்தை நிறுவி, சூரிய பகவானை வழிபட்டான். அதில் மகிழ்ந்த சூரிய பகவான், ’இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது’ என்று அருளினார். இந்த கோவில் காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜங்கம்பாடியில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை ‘விமலாதித்யர்’ என்று கூறுவர்.

    சூரிய பகவானின் மகன்களில் ஒருவர் எமதர்மராஜன். இவர் தனக்கு அதிக சக்தி வேண்டும் என்று தன் தந்தை சூரிய பகவானுக்கு ஆலயம் நிர்மானித்து, தவமியற்றி வரங்கள் பெற்றதாகப் புராணம் கூறும். எமன் நிறுவிய சூரிய பகவானை ‘எமாதித்யர்’ என்பர். இக்கோவில் காசியில் சங்கடாகாட் என்னுமிடத்தில் உள்ளது.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது அவர்களின் பத்தினி யான திரவுபதி, சூரிய பகவானைத் தியானித்து அட்சய பாத்திரம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. திரவுபதி வழிபட்ட சூரிய பகவான் கோவில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் உள்ளது. இங்கு அருள்புரியும் சூரிய பகவானை திரவுபதி ஆதித்யர் என்பர்.

    நான்கு வேதங்களிலும் புலமை பெற்றிருந்த விருத்தன் என்பவன் தன் இளமை மாறி முதுமைத் தோற்றத்தில் காட்சி தந்தான். அவன் காசியில் சூரியபகவானை கடுமையாக தியானித்து மீண்டும் இளமையைப் பெற்றான். விருத்தன் வழிபட்டு பேறு பெற்றதால் சூரிய பகவான் ‘விருத்தாதித்யர்’ என்று போற்றப்படுகிறார். இந்த கோவில் காசியில் மீர்காட் என்னுமிடத்தில் உள்ளது.

    ‘சூரிய பகவானை தினமும் வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். கண்பார்வை நன்கு தெரியும். சரும நோய்கள் வராது. மன சஞ்சலங்களையும் மற்ற துன்பங்களையும் தீர்த்து வைப்பதால் சூரிய பகவானை ‘லோலார்க்கர்’ என்று போற்றுவர். இந்த சூரிய பகவான் கோவில் அதிசங்கமத்தில் புகழ்பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது.

    காசி திருத்தலத்தின் வடக்கே ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தக்குளம் உள்ளது. இதை வக்ரியா குண்டம் என்றும் கூறுவர். அங்கு ஒரு ஆடும் ஒரு பெண்ணும கடுமையாக தவமிருந்து சூரிய பகவானின் அருளைப் பெற்றனர். இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை ‘உத்திர அர்க்கர்’ என்பர்.
    Next Story
    ×