search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோளிங்கர் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
    X

    சோளிங்கர் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

    திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.
    திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இங்கு நரசிம்ம பெருமானை ஆழ்வார்கள் மூவர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    சோளிங்கரின் புராணப் பெயர் கடிகாசலம். இவ் விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர். ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்தனர். அவை மாறி, மாறி தற்போது சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

    அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்தும், திருத்தணி ரெயில் நிலையத்திலிருந்தும் 27 கி.மீ. தொலைவில் சோளிங்கர் அமைந்துள்ளது.

    சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் மூன்று சன்னதிகளை கொண்டுள்ளது.

    1. திருமலை (பெரியமலை) : அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு யோக நரசிம்மசுவாமி எழுந்தருளியுள்ள மலைக்கோயில்.



    2. சிறிய மலை (கடிகாசலம்) : அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய மூவரும் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். மேற்படி இரண்டு மலைக்கோயில்களும் நகரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது.

    3. ஊர் திருக்கோயில் : அருள்மிகு பக்தோசித பெருமாள், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய எம்பெருமான்கள் ஊரிலேயே எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    தொண்டை நாட்டு வைணவ திருப்பதிகள் 22-ல் ஒன்றாக சோளிங்கர் திகழ்கிறது. ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

    ஏழு மாமுனிவர்களான வாமதேவர், வசிஷ்ட, கத்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனைத் தொழ எம்பெருமான், ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க அவதாரமாகும். அத்தகைய தெள்ளிய சிங்கமாகிய தேவனே யோக நரசிங்கனாய் இங்கு கோவில் கொண்டுள்ளான்.
    Next Story
    ×