search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்
    X

    ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மாம்பாறை கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.
    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம். இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும், பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை. மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை. அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி சேகர்.

    பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர். அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின் அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார். அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால், அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம். அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும், பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம்.

    கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார். அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம் என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

    ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம் செய்யலாம். முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார் பூசாரி சேகர்.

    இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில் எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில் சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.

    நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
    Next Story
    ×