search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆபத்தில் கைகொடுக்கும் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
    X

    ஆபத்தில் கைகொடுக்கும் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

    கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும்.
    ஆபத்து வரும் போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை திருத்தலம்.

    கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும். தற்காலம் ஆடுதுறை என அழைக்கப்படும் இவ்வூர், சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பூபாளகுலவள்ளி வளநாடு, துரைமூர்நாடு என்று அழைக்கப் பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் வள்ளலாரால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம் இதுவாகும்.

    இத்தல இறைவனின் திரு நாமம் ஆபத்சகாயேஸ்வரர், இறைவியின் பெயர் பவளக் கொடியம்மை என்ற பிரபாளவள்ளி. ஆலய தல விருட்சம் பவளமல்லி, தீர்த்தம் சூரிய தீர்த்தம் மற்றும் சகாய தீர்த்தம் ஆகும்.

    தல வரலாறு :


    ராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய் தவன், வானர அரசனான வாலி. அவனது சகோதரன் சுக்ரீவன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாலியைக் கண்டு அச்சமடைந்த அசுரன், புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதனால் தம்பி சுக்ரீவனை குகைக்கு வெளியே காவல் இருக்கச் செய்து விட்டு, மற்ற வானரர்களுடன் குகைக்குள் சென்றான் வாலி.

    ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. குகைக்குள் சென்ற வானரங்கள் அனைவரும் வந்து விட்ட நிலையில் வாலி மட்டும் வரவில்லை. மேலும் அவ்வப்போது அபயக்குரல் கேட்பதும், ரத்தம் வெளிவருவதுமாக இருந்ததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் கருதினான்.

    பின்னர் தன் சகோதரனைக் கொன்றவன் வெளியே வரக்கூடாது என்பதற்காக, குகையின் வாசலை ஒரு பெரும் பாறையால் மூடிவிட்டு, கிஷ்கிந்தைக்கு திரும்பினான். அரசவை அமைச்சர்கள், சுக்ரீவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாட்சி செய்து வந்தான்.

    சில மாதங்கள் கழித்து, அனைவரும் வியக்கும் வகையில் வாலி உயிருடன் வந்து நின்றான். அவன் அசுரனை கொன்றுவிட்டு திரும்பியபோது, குகை மூடியிருப்பது கண்டு அதிர்ந்தான். கிஷ்கிந்தை வந்தபோது சுக்ரீவன் அரசாட்சியில் இருப்பதை பார்த்ததும், வாலிக்கு கடும் கோபம் உண்டானது. குகை வாசலை மூடிவிட்டு ராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன் மீது குற்றம் சாட்டி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றினான்.

    தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்கு தீங்கு இழைத்து விட்டதாக கருதிய சுக்ரீவன், அதற்கு பிராயசித்தம் தேடினான். மேலும் அண்ணனால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினான்.

    தன்னை சரணடைந்த சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலி யிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார் ஆடுதுறை ஈசன். இதனால் அவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார் என்று தல புராணம் சொல்கிறது.

    சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    தில்லை திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்காகவும், வியாக்கிர பாதருக்காகவும் ஆனந்த திருநடனத்தை ஆடிக் காண்பித்தார் சிவபெருமான். அதைக் கேட்டு பிரம்மிப்பில் ஆழ்ந்த தேவர்களும், பிற முனிவர்களும் தங்களுக்கும் அந்த நடனத்தை இவ்வாலயத்தில் ஆடிக் காண்பிக்க வேண்டும் என்று ஈசனை வேண்டினர். அதன்படி ஈசன் ஆடுதுறையிலும் ஆனந்த தாண்டவத்தை ஆடி அருளினார். எனவே நடனக் கலையில் சிறந்து விளங்க விரும்பு வோர், சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போல, இத்தல இறைவனையும் பிரார்த்திக்கலாம்.

    ஒரு சமயம் நாரதர், ஆகாய வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் அனுமன் இருப்பதைப் பார்த்து நலம் விசாரிக்க கீழே இறங்கினார். ஆனால் நாரதர் வந்ததை அனுமன் கவனிக்கவில்லை. ஏனெனில் அவர் ராம கீர்த்தனையில் மெய்மறந்திருந்தார். நாரதரோ, அனுமனின் சங்கீத கலை மறந்து போகுமாறு சபித்தார். அதில் இருந்து விடுபட அனுமன் இந்த ஆலய இறைவனை வணங்கியதாக சொல்லப்படுகிறது.



    ஆலய அமைப்பு:


    இவ்வாலயம் கிழக்கு நோக்கி 3 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாசலைக் கடந்து சென்றால், கொடிமரத்து விநாயகரையும், பலிபீடத்தையும், சிறு மண்டபத்துக்குள் உள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப்பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களும், திருப்புகழ்ப் பாடல்களும் வடிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாவது வாசலின் முன்பாக நின்று நிமிர்ந்துப் பார்த்தால், வானரங்களின் ராஜனும், தனது சகோதரனுமான வாலியின் கொடுமையில் இருந்து மீள சுக்ரீவன் சிவபூஜை செய்வதும், சுக்ரீவனை இறைவன் அன்னப் பறவையாகவும், அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றி அருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை சிற்பமாக உருவாக்கப் பட்டிருக்கிறது.

    அதற்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக காட்சியருளிக் கிறார். உள் பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் உள்ளனர். மேற்கு திருமாளப்பத்தியில் உள்ள ஏழு சன்னிதிகளில் முறையே வாயுமூர்த்தி, மகாகணபதி, காசிவிசுவநாதர், சுக்ரீவனுக்கு அருள்புரியும் சுவாமி மற்றும் அம்பாள், வருணலிங்கம், விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், இந்திர லிங்கம், குபேரலிங்கம், கஜலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் கிணறும், நடராஜர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நாகர், சொர்ண காலபைரவர், சூரியர், சனி பகவான், பாணலிங்கம், ஹரதத்தர், நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கருவறை கோட்டத்தின் தென்புறம் கோஷ்ட கணபதி, நடராஜர், அகத்தியர், சிவன் (இவர்கள் நால்வரையும் பூஜிக்கும்) ராணி செம்பியன் மாதேவி சிற்பம். மற்றும் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். மேற்குபுறம் அண்ணாமலையார், (இவரை பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபடுகின்றனர்). வடபுறம் பிரம்மா, சிவனை வழிபடும் காரைக்கால் அம்மையார், எட்டுத் திருக்கரங்களோடு அருளும் துர்க்கா தேவி, கங்கா விசர்சன மூர்த்தி, பைரவ மூர்த்தி உள்ளனர். கருவறையின் முன் நந்தியம்பெருமானை பார்த்து புன்னகைத்தவாறு ஆபத்சகாயேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    இவ்வாலய முருகப்பெருமான் சிறப்புக்குரியவர்்; அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும். ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை - மகன், இவ்வாலயம் வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால், வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

    அக்கரையில் அருட்காட்சி :


    தீவிர சிவ பக்தராக விளங்கிய ஹரதத்தர், அனுதினமும் திருநீலக்குடி, திருக்குழம்பியம், திருக்கோடிக்காவல், கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு, இறுதியாக ஆடுதுறை இறைவனை தரிசித்து விட்டுதான் உணவு அருந்துவாராம். ஒருநாள் காவிரியில் வெள்ளம் காரணமாக தண்ணீர் அதிகமாக ஓடிற்று. ஆற்றை கடந்துச் சென்று இறை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த ஹரதத்தர், தனக்கு ஏற்பட்ட இன்னலைத் தவிர்க்க வேண்டும் என இத்தல இறைவனிடம் முறையிட்டார். இதையடுத்து ஆற்றின் அக்கரையில் இருந்த ஹரதத்தருக்கு, இறைவன் அங்கேயே காட்சி தந்து அருள்புரிந்தாராம்.

    இவ்வாலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து உற்சவங்களும், திருவிழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    அமைவிடம் :


    இத்திருக்கோவிலுக்குச் செல்ல மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள் ளன. அருகாமை ரெயில்நிலையம் மயிலாடுதுறை மற்றும் ஆடுதுறை.
    Next Story
    ×