search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரதம்
    X

    முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரதம்

    அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும்.
    அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

    அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.

    நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.

    அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

    அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
    Next Story
    ×