search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பன் விரதம் ஏன்?
    X

    ஐயப்பன் விரதம் ஏன்?

    தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.
    ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் நாம் அறியாமல் வாழ்வது நமக்கு தான் இழப்பு.

    நம் இறந்த கால வாழ்க்கையில் (முன் பிறப்பும், இந்த பிறப்பும் உட்பட) நாம் செய்த அனைத்து செயல்களுக்கும் ஏற்றவாறு நமது நிகழ்காலம் அமைகிறது. சுருக்கமாக சொன்னால், இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதுவே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதை நம் முன்னோர்கள் அழகாக ஒரே வார்த்தையில் கர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

    நம் கர்மவினையின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது சில சமயங்களில் இந்த வலியும் வேதனையும் துரிதமாக முடிந்து விட்டால் நிம்மதி என்று நமக்கு தோன்றும். தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் வழிபாடு.

    இந்த பின்னணியில் தான் ஐயப்பன் வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்கு அடையாளமாக, குருவின் கருணையோடும், வழிகாட்டுதலுடனும் மாலை அனிந்து, உணவை குறைத்து, புலால் உணவு நீக்கி, கள்ளுண்ணாமை பின்பற்றி, விரதம் முடியும் வரை பிரம்மச்சர்யம் கடைபிடித்து, போதை வஸ்துக்களை தவிர்த்து - எல்லாம் நம் கண் முன்னே இருந்தும் ஒழுக்கமாக வாழும் கலை. அவ்வளவு ஏன்? காலில் செருப்பு அணியாமல், சிகை அல்லங்காரம் கூட இல்லாமல், கருப்பு உடை அணிந்து, வயது வித்யாசம் பாராமல் அனைவரையும் மரியாதையுடன் 'சாமி' என அழைத்து, அரை பட்டினியில் ஒரு பிச்சைக்காரனை போல் வாழ்ந்து நம் கர்ம வினையை தீர்க்கும் ஒரே அற்புத மார்க்கம. விரதம் முடிக்க காடு மலை தாண்டி நடந்து சபரி மலை சென்று ஐயனை தரிசித்து வாழ்க்கையில் மீள்வதே நோக்கம்.

    முத்தாய்ப்பாக - நெய் தேங்காய் என்ற ஒரு விஷயம். தேங்காயில் உள்ள ஓடே நம் எலும்புகள், நார் நமது நரம்புகள், வெள்ளை தேங்காய் நம் தசை, நீர் நமது குருதி. நாம் திருந்தி தெளிந்ததற்கு அடையாளமாக நெய். பாலிலிருந்து, தயிராகி பின் நெய்யாக மாறுவது நம் ஆத்ம தரிசனம். பாலில் நேரடியாக நெய் தெரியாது. பல கட்டங்களுக்கு பிறகு திரிந்து மாறி நெய்யாகிறது என்பதே தத்துவம். அந்த நெய்யும் இறுதியாக இறைவன் மீது அபிஷேகமாகிறது. நம் ஜீவாத்மா இறைவனை அடைவதே இந்த தத்துவம். அனால் சுமந்து சென்ற தேங்காய் கோவில் வாசலில் ஓமகுண்டத்தில் தீக்கிரையாகிறது. அது நம் உடலின் நிலையாமையை உணர்த்துவது.

    இறுதியாக, இந்த வழிபாட்டு முறை கர்ம வினையை கழுவுவதற்கு மட்டும் அல்ல. வருங்காலத்தில் ஒழுக்கமாக வாழவும் ஒரு பயிற்சியே. கர்ம வினை தீர தீர, ஒழுக்கம் மேலோங்க சுபீட்சமான வாழ்க்கை கிட்டும். இதுவே சிறந்த தவமாகும்.
    Next Story
    ×