search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மைகளைப் பெற்றுத்தரும் நோன்பு
    X

    நன்மைகளைப் பெற்றுத்தரும் நோன்பு

    நோன்பு வைத்திருக்கும் நிலையில், இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள குணங்களையும் நாம் கொண்டால் இறைவனின் பொருத்தத்தையும் நாம் பெற்று விடுவோம்.
    நோன்பு காலத்தில் பயணிப்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ள அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக. சென்ற நோன்பிலிருந்து இந்த ஆண்டு நோன்பு வரை ஒரு வருட காலத்தை நம் ஆயுளில் நீட்டித்து தந்துள்ள அந்த இறைவனுக்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    நன்றி செலுத்தும் அதே வேளையில் சென்ற வருட நோன்புக்காலத்தில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது, அதன் பிறகு இது வரையிலான இடைப்பட்ட காலத்தில் இறைவனுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் நம்முடைய செயல்பாடுகளில் நம்மை நாம் மாற்றிக் கொண்டோமா? மற்ற மனிதர்களிடம் நாம் நல்ல விதமாக நடந்து கொண்டோமா? என்று நம்மை நாமே சீர் தூக்கிப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

    நம் பதில் ‘ஆம்’ என்பதாக இருந்தால் அதிகமான நன்மைகளை இறைவனிடத்தில் சம்பாதித்துக் கொள்வதற்கு, இன்னும் முனைப்புடன் நோன்பினை நிறைவேற்ற நாம் தயாராக வேண்டும். ஏனெனில் அல்லாஹ், நம்முடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ரமலான் மாதத்தில் எழுபது மடங்கு கூலியை வெகுமதியாகத் தருகிறான்.

    நம் பதில் ‘இல்லை’ என்பதாக இருந்தாலும், கவலை வேண்டாம். இப்பொழுது நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி நம்முடைய நற்செயல்களால் அதிக நன்மைகளை அறுவடை செய்வதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும்.

    ‘ஏன் நோன்பு நோற்கிறீர்கள்?’ என்ற கேள்வி பொதுவாக கேட்கப்பட்டால், ‘ஏழைகளின் பசியை நாமும் அறிவதற்கு, இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று என்பதால், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு வைப்பதால் நம்முடைய உடல் இயக்கங்கள் சீராகலாம்...’ என்பதாக பல பதில்கள் கிடைக்கலாம்.

    இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுமே இறைவனையும், இறை வனுக்கு விருப்பமான செயல்களையும் மையப்படுத்துவதாக அமைந்துள்ளன. நோன்பினைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

    ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்’. (2-183)

    ‘நோன்பு நோற்பதால் நீங்கள் இறையச்சம் உடையவர் ஆவீர்கள்’ என்பதற்கும், ‘நோன்பு நோற்பதால் இறை அச்சம் உடையவர்கள் ஆகலாம்’ என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு.

    கிட்டத்தட்ட 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் இருப்பதென்பது ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு சாத்தியமானதே. சாப்பிடாமல், குடிக்காமல் இருப்பது நோன்பன்று. இறைவன் வெறுக்கும் அத்தனை காரியங்களிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்வதாலேயே ஒரு மனிதர் நோன்பு நோற்றவர் போல் ஆவார்.

    ஒருவர் பொய், புறம், பொறாமை, கோபம், இன்னும் ஒழுக்கக் கேடான விஷயங்களில் இருந்து தம்மைத் தடுத்துக் கொண்டு, ‘நான் நோன்பாளியாக இருக்கிறேன், என் இறைவனுக்கு நான் அஞ்சு கிறேன், தவறான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் என்னை நான் முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன்’ என்று தன்னைப் படைத்த இறைவனிடம் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் என்றால் அவரே உண்மையான நோன்பாளி.

    இப்படிப்பட்ட மன வலிமையை யார் நோன்பின் மூலம் பெறவில்லையோ அவர்கள் இறை அச்சம் உடையவர்கள் ஆகவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். இதுவே இறை அச்சம் உடையவர்களாக ஆகலாம் என்பதின் விளக்கமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். நம்மைப் படைத்த இறைவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக் கிறான்.

    ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தை அடைந்து கொள்பவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் நோன்பாளிகளுக்காக தயார்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் அறிவிக்கிறான்.

    ‘நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும், பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும், பெண்களும், (இறைவனுக்கு) வழிபடும் ஆண்களும், பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும், பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும், பெண்களும், தானம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், கற்புள்ள ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவு கூரும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்’. (33:35)

    நோன்பு வைத்திருக்கும் நிலையில், இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள குணங்களையும் நாம் கொண்டால் இறைவனின் பொருத்தத்தையும் நாம் பெற்று விடுவோம்.

    எனவே பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ்விடம் இருந்து கூலியையும் பெற்றுக்கொள்வதும், கொள்ளாததும் நம் கையில் தான் உள்ளது. சுவனபதி கிடைக்கும் என்று நற்செய்தி பெற்றவர்களில் நோன்பாளிகளும் இருக்கிறார்கள்.

    அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

    ‘பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒரு வனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்: (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியை கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்கும் என்று நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்’. (9:112)

    நம்மில் பெரும்பாலானோர் நோன்பின் பொருட்டாவது, இறைவன் விரும்பியவாறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு தவறுகள் ஏதும் செய்துவிடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.

    ஆனால், ரமலான் முடிந்து மறுநாள் காலையிலேயே நோன்போடு எல்லா அமல்களும் முடிந்து விட்டது போலவும், ஒரு மாத காலம் வரை யாரோ நம்மை கட்டிப் போட்டது போலவும், தளைகளில் இருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வு வருவதையும் தடுக்க முடிவதில்லை.

    ரமலானில் நம்முடைய செயல்பாடுகள் எப்படி இருந்ததோ, அப்படியே மீதமுள்ள 11 மாதங்களிலும் இருப்பதற்கு நாம் முயற்சி செய்தால் மற்ற சமுதாய மக்களுக்கும் நாம் ஒரு முன்னுதாரணமாக இருப்போம், நம்முடைய வாழ்வும் செழிப்பாகும்.

    ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.
    Next Story
    ×