search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எதிரிகளின் தொல்லையும் இறைநேசர்களின் உறுதியும்
    X

    எதிரிகளின் தொல்லையும் இறைநேசர்களின் உறுதியும்

    மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர்.
    'உஹுத் போர் முடிந்து எல்லோரும் மதீனாவிற்குத் திரும்பிய நிலையில், எதிரிகளான குறைஷிகள் தங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லையென்று மதீனாவிற்குத் திரும்பி மறுமுறை போர் தொடுக்க வரவேண்டுமென்று யோசிப்பர்'என்று நபி முஹம்மது (ஸல்) நம்பினார்கள். காயத்துடனும் களைப்புடனும் மதீனாவிற்குத் திரும்பிய முஸ்லிம்கள் நபிகளார் தந்த எச்சரிக்கையால் விழிப்புணர்வுடனே இருந்தனர்.

    மறுநாள் எதிரிகளை எதிர்கொள்ளத் தயாரானவர்களாக முஸ்லிம்கள் மீண்டும் எழுச்சியுடன் கிளம்பினார்கள். தங்களுடைய காயங்களையும், களைப்பையும் பொருட்படுத்தாமல் விரைந்தனர். முன்பு போரில் கலந்து கொள்ளாதவர்களும் இம்முறை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துப் புறப்பட்டனர்.

    மதீனாவைவிட்டு வெளியேறி அங்கிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த ‘ஹராவுல் அஸத்’ என்ற இடத்தை அடைந்து முகாமிட்டனர். அந்த இடத்தில் மஅபத் இப்னு அபூமஅபத் என்பவர் சந்தித்து நபிகளாரையும் அவர்களது தோழர்களையும் பற்றி அக்கறையுடன் விசாரித்தவராக, தமது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டு அங்கேயே இஸ்லாமைத் தழுவினார். நபி முஹம்மது(ஸல்) அவரிடம், “நீங்கள் அபூ ஸுஃப்யானிடம் சென்று நாங்கள் இங்கு முகாமிட்டுருப்பதைத் தெரிவியுங்கள்” என்றார்கள்.

    நபிகளார் நினைத்தது போலவே எதிரிகள் மக்காவிற்குச் செல்லாமல், ‘நாம் முஸ்லிம்களின் தலைவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டோம். முஸ்லிம்களின் ராணுவ முகாம்களையும் உடைமைகளையும் நாம் இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் நம்மிடம் கைதியாகவில்லை. அவர்களுடைய ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழிக்க வேண்டும். நாம் களைப்புடன் இருப்பவர்களை வெட்டிச் சாய்த்துவிடலாம்.



    மதீனாவிற்கு மீண்டும் செல்வோம்’ என்று முடிவெடுத்தவர்களாக அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்பும்போது அங்கு மஅபத் சென்றடைந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்குக் கற்பனையான போரைச் சித்தரித்து “முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நம்முடன் போர் புரிய புறப்பட்டுவிட்டார். போரை தவறவிட்டவர்களும் இம்முறை சேர்ந்து கொண்டுள்ளனர்.

    அவர்கள் வெறியுடன் நம்மைத் தாக்க வருகிறார்கள்” என்று பயமுறுத்தினார். பதற்றமடைந்த அபூ ஸுஃப்யான் “நீ உண்மையைத்தான் சொல்கிறாயா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு மஅபத் “நம்பிக்கையில்லையென்றால், யாரையாவது கொஞ்சம் தூரம் அவர்களை நோக்கி பயணிக்கச் சொல், அங்கு முஸ்லிம்களின் முதல் படையின் முகாமை பார்ப்பாய். நீங்கள் திரும்பிவிடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது” என்று மேலும் பயமுறுத்திப் பார்த்தார்.

    மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர். ஆனால் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு பொய் பரப்புரையை அனுப்பி வைத்தனர். அதாவது ‘முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்கக் குறைஷிகள் பெரும்படையோடு வருவதாக’ செய்தியை அனுப்பி வைத்தனர். நபிகளாருக்கு இச்செய்தி எட்டியது.

    அல்லாஹ் தன் திருமறையில் இது பற்றிக் கூறுகிறான், மக்களில் சிலர் அவர்களிடம் “திடமாக மக்களில் பலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி அச்சுறுத்தினர். ஆனால் இது அவர்களின் ஈமானை அதாவது இறைநம்பிக்கையைப் பெருக்கி வலுப்படச் செய்தது.

    “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் அதாவது அருட்கொடையையும், மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.

    திருக்குர்அன் 3:173-174, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×