search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்பை விதைப்போம்
    X

    அன்பை விதைப்போம்

    அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்.
    நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான, அன்புக்குரிய இந்த உலகம் அன்புக்காக ஏங்கி தவிக்கிறது. அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உருமாறி நிற்கிறது. அன்பு மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருக்கிறது. அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்.

    ஒருநாள் தனது ஐந்து வயது தங்கையை அழைத்து கொண்டு ஏழு வயது அண்ணன் கடைவீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அச்சிறுமி ஒரு கடையின் முன்னால் நின்று கொண்டு அங்கிருந்த மொம்மையை பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது அச்சிறுவன் எந்த பொம்மை வேண்டும் என கேட்டு கடையிலிருந்த ஒரு பொம்மையை எடுத்து கொடுக்கிறான். கடையின் முதலாளியிடம் இப்பொம்மையின் விலை என்னவென்று கேட்கிறான். உடனே முதலாளி உன்னிடம் என்ன இருக்கிறது என கேட்ட போது ஆறு சிப்பி இருக்கிறது என பதிலுரைத்தான்.

    ஆறு சிப்பியினை எடுத்து கடைமுதலாளியிடம் கொடுத்தான். இப்பொம்மையின் விலை நான்கு சிப்பி தான் எனக்கூறி நான்கை பெற்று கொண்டு மீதி இரண்டை திரும்ப கொடுத்து விடுகிறார். இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேலைக்காரன், 4 சிப்பியினை பெற்று கொண்டு மிக உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே என கேள்வி எழுப்புகிறான். உடனே முதலாளி அச்சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்பதை புரியாத வயது, ஆதலால் பணம் தான் பெரியது என்ற சிந்தனை அவனது உள்ளத்தில் உருவாகாமல் தடுத்து விட்டேன்.

    அவன் பெரியவனாகிற போது இச்சம்பவத்தை நினைத்து பார்த்தான் என்றால் இவ்வுலகம் நல்லவர்களால் ஆனது என்ற சிந்தனை அவனில் பிறப்பெடுக்கும். எல்லாரிடமும் அன்பு காட்டும் போது வாழ்வு அழகானதாக உருமாறும். அன்பு தான் இவ்வுலகத்தினை இயக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் நாமும் வாழ முற்படுவோம்.

    இன்றைய நாளில் எத்தனை மனிதர்களின் உள்ளத்தில் அன்பு மலர்வதற்கு நான் காராணமாக இருந்தேன் என்பதனை உணர்வோம். அன்பு ஒன்றே நிரந்தரம், அது வாழ்வில் ஆதாரம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,

    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×