search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்
    X

    தைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்

    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.
    தேவனுடைய பிள்ளைகளுக்கும், உலக மக்களுக்கும், தேவ ஊழியர்களுக்கும் பல விதங்களில் பிரச்சனைகளை உண்டாக்கி ஆத் மாவில் சோர்வையும், சரீரங்களில் பலவீனங் களையும் பிசாசானவன் கொண்டு வருகின்றான்.

    நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் உங்களைப் பார்த்து சொல்கிறார், ‘தைரியமாயிருங்கள்’.

    ஜெபத்தோடு வாசித்து தியானம் செய்யுங்கள்

    ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்’. சங்.138:3

    அதைரியம், சந்தேகம் பலவிதமான மனக்குழப்பம் ஒரு தேவபிள்ளைக்கு மனதளவில் உண்டாகும்போது சரிவர ஜெபிக்க முடியாமல், வேதத்தை வாசிக்க விருப்பமில்லாமல், மேலும் தேவனை தேடுவதற்கு இருதயம் தாகம் கொள்ளாமல் போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது, அன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். பிசாசானவன் உங்களுக்கு விரோதமாக கிரியை செய்து கொண்டிருக்கிறான்.

    இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மேற்கண்ட சங்கீதத்தை மீண்டும் ஒருமுறை ஜெபத்தோடு வாசித்து தியானம் பண்ணுங்கள். நான் கூப்பிட்ட போது எனக்கு மறு உத்தரவு அருளினார். தேவனுடைய பிள்ளையே, நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது நம்முடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்காத சூழ்நிலையில் ஆத்மாவிலே பலவீனம் தாக்கிவிடும்.

    அப்படியானால் நம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க வேண்டுமல்லவா? சங்.37:5 சொல்லுகிறது, ‘கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்’.

    நாம் எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். சந்தோஷத்தோடு ஆண்டவரை நோக்கி நாம் ஜெபம் பண்ணும்போது கட்டாயம் ஜெபம் கேட்கப்படும். ஆகவே நம்முடைய சந்தோஷத்தை சத்துரு திருடி விடாதபடி நாம் காத்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு பதில் கொடுக்கும் போதெல்லாம் ஆத்மாவில் பெலன் உண்டாகும். அப்போது நம்மை அறியாத ஒரு தைரியம் நமக்குள்ளே ஏற் படுவதை உணருவோம். ஆகவே எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்களோடிருக்கிறார்.

    எனக்கு செவி கொடுக்கிறார் என்கின்ற தைரியம்

    ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. 1 யோவான் 5:14

    அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய நிருபத்தில் பரிசுத்த ஆவியில் ஏவப்பட்டு மேற்கண்ட வசனத்தை எழுதினார். அன்பானவர்களே, நாம் ஜெபம் பண்ணும்போது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகிறது. அதை கொடுக்கிறவர் கர்த்தர். ஆகவே உடனே தேவ சமுகத்தில் போய் ஜெபிக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய கூடிய பெரிய உதவி ஒன்று உண்டானால் அது ஜெபம் என்று ஒரு பரிசுத்தவான் குறிப்பிடுகிறார்.

    அதே வேளையில் சிலர் ஜெபித்த பிறகும் ஆண்டவர் கொடுப்பாரா கொடுக்கமாட்டாரா? கிடைக்குமா கிடைக்காதா? போன்ற சந்தேக கண்ணோட்டத்தோடு ஆண்டவரைப் பார்ப்பார்கள்.

    நாம் ஜெபிப்பதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய காரியங்கள் தேவனுக்கு சித்தம் தானா என்று முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் சொல்கிறது, ‘நாம் அவருடைய சித்தத்தின்படி எதையாகிலும் கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார்’ என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்.

    என் அன்பு சகோதரனே! சகோதரியே! அவருடைய சித்தம் அறிந்து ஜெபிக்கிறவர்கள் எப்போதும் தைரியமாயிருப்பார்கள். ஆகவே, மனம் தளராமல் சோர்ந்து போகாமல் ஜெபத்தைக் கூட்டுங்கள், தைரியமடைவீர்கள். ஏனெனில் இயேசு உங்களோடிருக்கிறார்.

    விசுவாசம் தைரியத்தை கொண்டு வரும்

    ‘அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது’. எபேசியர் 3:12

    நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிற ஓர் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் வேதாகமம். அவருடைய வசனம் தான் நம்முடைய கால் களுக்கு தீபமாகவும், பாதைக்கெல்லாம் வெளிச்சமாகவும் இருக்கிறது.

    ஒரு மனிதனுக்கு, ‘ஆண்டவரால் எதையும் சாதிக்க முடியும்’ என்கிற தைரியம் வந்து விட்டால், எதையும் அவர்கள் சந்திக்க தயங்க மாட்டார்கள். ‘கர்த்தர் என்னோடிருக்கிறார்’ என்ற தைரியம் ஒரு தேவபிள்ளைக்குள் இருந்தால் ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுவது மிகவும் எளிது.

    ஆண்டவர் பேரில் நமக்கு எப்போதும் ஓர் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கவேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், ‘நன்றாக வேதம் வாசிப்பார்கள், ஜெபிப்பார்கள், ஆலயம் செல்வார்கள், ஏன்? ஆண்டவருக்கே ஊழியம் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசமோ, அவர்களது வேலை, அல்லது பணம், படிப்பின் மீது இருந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பிரகாசிப்பதில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.

    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.

    ‘தைரியமாயிருங்கள், இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார்’.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    Next Story
    ×