search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனந்தமான குடும்பங்கள்
    X

    ஆனந்தமான குடும்பங்கள்

    கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.
    இந்த உலகில் வாழும் மக்களில் பலர் சந்தோஷமின்றி, சமாதானமின்றி வாழ்கிறதை நாம் காண நேரிடுகிறது. குறிப்பாக அநேக குடும்பங்கள் தங்களின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தொலைத்து விட்டது என்றால் அது மிகையாகாது.

    சமாதானம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகிவருகிறது. குடும்பங்களிலே கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமையும், சந்தோஷமும் இல்லாமல் எத்தனையோ தம்பதிகள் வாழ்கின்றனர்.

    பிள்ளைகள்-பெற்றோர்கள் இடையே அன்பும் ஐக்கியமும் இன்றி எத்தனையோ குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. என் கணவர் என்னை உண்மையாய் நேசிக்கவில்லையே, புரிந்துகொள்ளவில்லையே என்று ஏங்கி தவிக்கும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். என் மனைவி என்னிடம் அன்பு காட்டவில்லையே என்று மனைவியின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் கணவன்கள் ஏராளம்.

    பெற்றோர்களின் இப்படிப்பட்ட ஜீவியம் பிள்ளைகளின் மனதை புண்படுத்துவதால் பிள்ளைகள் நொறுங்குண்ட இதயத்தோடு தங்களின் வாழ்க்கையை கழிக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களை ஆசீர்வதித்து மெய்யான, நிலையான சமாதானத்திற்குள் மனுக்குலத்தை வழி நடத்தவே எம்பெருமான் இயேசு பூமியில் அவதரித்தார். அவருக்கு திருமறையில் இனியொரு பெயரும் உண்டு, அதாவது, ‘சமாதான பிரபு’ என்று.

    ஆம், அவர் சமாதான பிரபு. சமாதானத்தை அருளுகிறவர். அவர் மக்களுக்கு இந்த பூமியில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அருளவே இறைமகனாக வெளிப்பட்டார். அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பரமேறிச் சென்றார். அவர் பரமேறிச் செல்வதற்கு முன் இப்படியாக கூறினார்:

    ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்து போகிறேன். என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. கலக்கம் வேண்டாம், பயம் வேண்டாம்’.

    இந்த கட்டுரையை வாசிக்கின்ற நீங்கள் எந்த காரியத்தைக் குறித்துக் கலங்கித் தவிக்கிறீர்களா?, பயப்படுகிறீர்களா? உங்களுக்கான நற்செய்தி இதோ: உங்கள் கலக்கத்தை மாற்றி பயத்தை போக்கி உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளவே இயேசு பிரான் பூமிக்கு வந்தார்.

    வருகிற வருமானத்தை எல்லாம் கணவர் குடித்து வீணாக செலவு செய்து குடும்பத்தை கவனிக்கவில்லை என்று வருந்திக் கண்ணீர் வடிக்கின்றீர்களா? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒரு வினாடி கண்களை மூடி நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். கடவுள் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்து, உங்கள் பிரார்த்தனையை கேட்டு உங்கள் கணவனின் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக்குவார். அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து கடவுளிடம் விடாப்படியாய் வேண்டிக்கொள்ளுங்கள். ஆம், அவர் ஜெபத்தை கேக்கிற தேவன்.

    அநேக குடும்பங்களில் மனைவிகள் தங்கள் புருஷர்களை எதிர்த்துப் பேசுகிறது உண்டு, கணவன்மாருடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடாமல், கீழ்ப்படியாமல் ஜீவிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு வேதம் கூறும் பிரதானமான அறிவுரை என்னவென்றால், ‘மனைவிகளே, சொந்த புருஷருக்குக் கீழ்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்’. (எபேசியர் 5:22,23).

    ஆம், மனைவிகள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பொழுது அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சமாதானம் உண்டாகும். சில குடும்பங்களில் கணவன்மார்களை காட்டிலும் மனைவிகள் அதிகம் சம்பாதிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தங்கள் கணவன்மார்களை நேசிப்பவர்களாகவும், அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருந்தால் சந்தோஷமும் சமாதானமும் பெருகும்.

    ‘பூர்வத்திலே தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து, பரிசுத்த ஸ்த்ரீகளும் தங்களுடைய புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்’ (1 பேதுரு 3:5).

    காதிலும், கழுத்திலும், பொன் ஆபரணங்களை அணிந்து, விலையேறப்பெற்ற உயர்ந்த வஸ்திரங்களை உடுத்தி, கண்களுக்கு மையிட்டு, உதடுகளுக்கு சாயம்பூசி, வித விதமான வாசனை பவுடர்களால் வருகிற அலங்காரத்தைக் காட்டிலும் ஒரு குடும்ப ஸ்த்ரீக்கு மெய்யான, உண்மையான அலங்காரம் என்னவென்றால், அவர்கள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிவதே என்று வேதம் திட்டமாய் கூறுகிறது.

    அதே போல, இயேசு நம்மை அன்பு செய்தது போல, புருஷன்மார் தங்கள் மனைவியரை அன்பு செய்ய வேண்டும் என வேதம் கட்டளையிடுகிறது. “அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்பு கூருகிறான்.” (எபேசியர் 5:28)

    ஆக, கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.

    இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ பரலோகத்தின் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு அருள் புரிவாராக. ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    Next Story
    ×