search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாட வேண்டிய போதனைகள்
    X

    நாட வேண்டிய போதனைகள்

    இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).
    உலகில் எல்லாருமே இக்கட்டான நிலைகளைத் தாண்டித்தான் வாழ வேண்டியதுள்ளது. பலரது பேராசைகள், மற்றவர்களின் வாழ்வாதாரங்களில் மறைமுக தாக்கங்களை ஏற் படுத்துகின்றன. உதாரணமாக, பேராசைகளை அடைவதற்கு லஞ்சம், ஊழல் போன்றவை பெரிய அளவில் உதவுவதால் பல்வேறு நன்மைகள், பணம் உள்ளவர்களிடமே சென்று தஞ்சம் அடைந்து கொண்டிருக்கின்றன.

    எனவே நியாயமான நன்மைகளைக்கூட எளியவர்கள் பெறுவதற்கு வழியில்லாமல் போய், தவித்து அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் நல்ல வழிகாட்டுதலை நாடும் இதுபோன்றவர்களை அற்புதம், அதிசயங்கள் தொடர்பான போதனைகள் அதிக அளவில் ஈர்த்துவிடுகின்றன.

    வியாதி, வறுமை, கடன் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்பது போன்ற போதனைகளை, கனிவான வார்த்தை களுடன் கூறுவதையே அவர்கள் அதிகமாக நம்புகின்றனர். ஏனென்றால், பல்வேறு சிக்கல்களால் தவித்துக் கொண்டிருக்கும் எவருக்கும் இதுபோன்ற ஆறுதலான வார்த்தைகளை சொன்னாலே சிறிது நேரத்துக்கு மனஅமைதி கிடைக்கும். இப்படி கிடைக்கும் தற்காலிக மனஅமைதிதான், உலக வாழ்க்கைக்கான போதனைகளை மட்டுமே நாடிச்செல்ல வழி அமைத்துக் கொடுக்கிறது.

    பாங்களுக்கு எதிரான கண்டிப்பான போதனைகள்தான், தனது இயல்பான பாவ வாழ்க்கையில் இருந்து விலகி, மனந்திரும்பி, இயேசுவின் வழிகளை நோக்கிச் செல்ல பாவிகளுக்கு தூண்டுதலாக உள்ளன. ஆனால் கண்டிப்பான வார்த்தைகள், ஈர்ப்பை ஏற்படுத்தாது.

    போதகங்கள் எதை மையப்படுத்தி இருந்தாலும் சரி, பக்தியை முதல் படியில் இருந்து பின்பற்றுகிறோமா என்பதை ஒவ்வொருவரும் ஆராய வேண்டும். அதிகாலையில் எழுந்து ஜெபி, உபவாசம் இருந்து ஜெபி, வேதத்தை தினமும் வாசித்து தியானம் செய், ஆலயத்துக்கு போகும்போது வேதத்தை கையில் வைத்துக்கொள், பொருளாதார ஆசியைப் பெற காணிக்கை கொடு என்றெல்லாம் மக்கள் போதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் இறைவனை நோக்கி ஜெபிப்பதற்கும், காணிக்கை கொடுப்பதற்குமான தகுதிநிலை (முதல் படி) பற்றிய ஆலோசனைகள் பல போதனைகளில் இடம்பெறுவதில்லை. அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவதால் மட்டுமே ஒருவனுடன் இறைவன் இடைபட்டுவிடுவாரா என்றால் இல்லை. அப்படியானால் ஒருவனது வாழ்க்கையில் இறைவன் இடைபடக் கூடிய தகுதிநிலை என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

    நீதிமொழிகள் 15:8,9-ம் வசனங்களில், “துன்மார்க்கருடைய பலி, கர்த்தருக்கு அருவருப்பானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கரின் வழி, கர்த்தருக்கு அருவருப்பானது. நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்” என்று கண்டிப்பு வார்த்தைகளுடன் கூறப்பட்டுள்ளது.

    யோவான் 9:31-ம் வசனத்தில், “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை என்று அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவபக்தியுள்ளவனாய் இருந்து அவருக்கு சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்” என்று வாசிக்கிறோம்.

    மேலும், “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று மனந்திரும்புவதற்கு ஏற்ற ஜெபத்தை முன்வைத்த பாவியின் ஜெபத்தையே இறைவன் கேட்டார் என்றும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. ஆக, ஒருவன் செய்யும் ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றால், துன்மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப விரும்பும் பாவியாக அவன் இருக்க வேண்டும்; அல்லது, மனந்திரும்பி பக்திப்பாதையில் செம்மையாக நடக்கிறவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

    துன்மார்க்கன் என்ற வார்த்தைக்கு ஒரு கோணத்தில் மட்டும் அர்த்தத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பலரை கொலை செய்தவன், கொள்ளை அடிப்பவன், பலாத்காரங்களை செய்பவன், லஞ்ச லாவண்யங்களுடன் சொகுசு வாழ்க்கையில் இருப்பவன் என்றெல்லாம் நினைத்து அப்படிப்பட்டவர்களை மனதில் நிறுத்திக்கொள்கிறோம். அது சரிதான். ஆனால் அந்தக் கோணத்தோடு அந்த அர்த்தம் முடிந்துவிடவில்லை.

    பிறருக்கோ அல்லது தனக்கோ துன்பம் தரக்கூடிய மார்க்கத்தில் (வழியில்) உள்ள பாவங்களைச் செய்யும் அனைவருமே துன்மார்க்கரே. உதாரணமாக, புகைத்தல், மது அருந்துதல், ரகசிய சரீர பாவங்கள் போன்றவற்றை ஒருவன் செய்தால், பிந்தைய காலத்தில் அவனது சொந்த உடல் துன்பமடையும். இறைவன் தந்த உடலை அந்த பாவங்கள் மூலம் துன்பப்படுத்திய அவனும் துன்மார்க்கனே. இது சொந்த சரீரத்துக்கு எதிரான துன்மார்க்கம்.

    மேலும், அதிக எரிச்சல், கோபம் போன்ற சில ஜென்ம சுபாவங்களின் அடிப்படையிலான பேச்சு மற்றும் செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பமும், அதைச் செய்தவனை துன்மார்க்கனாக்கி விடுகிறது. அதோடு, உள்ளத்தில் இருந்து புறப்படும் பொறாமை, இச்சை, பெருமை, பொருளாசை, பகை போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவன் துன்மார்க்கன் ஆகிறான்.

    ஆக, உடல், உள்ளம், சுபாவம் ஆகிய 3 வகையில் பாவம் செய்யும் எந்தவொரு மனிதனும் துன்மார்க்கனே. இப்படிப்பட்ட நிலையில் இருந்து நீங்குவதற்கான இறைவழியை நாடுவதே, வாழ்க்கையில் இறைவன் இடைபடக்கூடிய தகுதியை நாடும் நிலையாகும். அதுதான் பக்திக்கு முதல்படி. அந்த முதல் படியில் ஏறாமல், அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவது இறைவனுக்கு அருவருப்பாகிவிடுகிறது என்பதை நீதிமொழிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    மற்றவனுக்கு துன்பம் இழைத்துவிட்டு, அதை நிவர்த்தி செய்யாமல் ஆலயத்துக்கு காணிக்கை கொண்டு வராதே என்று இயேசு நேரடியாகவே எச்சரித்துள்ளார் (மத்.5:23,24). இறைவனுக்கு அருவருப்பானதை செய்தால் பல்வேறு துன்பத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை பல உதாரணங்கள் மூலம் வேதம் நமக்கு காட்டியுள்ளது.

    எனவே பாவங்களில் இருந்து மனந்திரும்புவது, பாவ நிவர்த்தி ஆகியவற்றுக்கான போதனைகளை மட்டுமே முதலில் நாடுங்கள், அதையே தேடுங்கள். மனந்திரும்பி, பாவநிவர்த்தி செய்யும் இறைநீதியில் நடப்பதுதான் பக்தியில் செம்மையான நிலையாகும். இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).

    Next Story
    ×