search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுளின் திட்டம்
    X

    கடவுளின் திட்டம்

    கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
    நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ... 1 கொரி - 3:16

    நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனைச் சரியாக அறிந்துணர்ந்து , அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் அநேகர் இவ்விதமான ஒரு சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை.

    பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்கச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்ப்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே அநேகர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாகப் போகின்றனர்.

    முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீரப் பிரகாரமான வாழ்க்கையும் அமைந்திட வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்துதான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.

    எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்குத்தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.

    அநேகர் எங்கோ போய் தரிசிக்க வேண்டிய ஒருவராக கடவுளைப் பார்க்கின்றார்களேயன்றி, தங்களோடு தங்க விரும்பும் ஒருவராக அவரைப் பார்ப்பதில்லை. எனவே அவர்கள் தாங்கள் எப்படியிருக்கின்றோம் என்பதைக் குறித்து அதிகமாக சிந்திக்காமல், ஜெபம், உபவாசம் வழியாக எப்படியாவது கடவுளுடைய அருளையும், உதவியையும் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே தீவிரமாயிருக்கின்றார்கள். அங்கே தேவனுடைய திட்டமாகிய நம்முடன் தங்குதல் என்பது நிறைவேறாததால் நம்முடைய திட்டங்களையும், வாஞ்சை, விருப்பங்களையும் கடவுள் தந்தருளி ஆசீர்வதிக்கவில்லை. இன்று நாம் கடவுள் தங்கத்தக்கவிதமான ஒரு ஆலயமாயிருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போமா.

    “ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள்

    அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.

    -சாம்சன் பால் 
    Next Story
    ×