search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு: அமலா பால் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
    X

    சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு: அமலா பால் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

    சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    கேரளாவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அவற்றை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

    கேரளாவை விட புதுச்சேரியில் சொகுசு கார்களுக்கான பதிவு கட்டணம் மிகவும் குறைவு என்பதால் முக்கிய பிரபலங்கள் அவர்களின் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து வருவதும் தெரியவந்தது.

    இதுபற்றி கேரள போக்குவரத்து அதிகாரிகள் முதலில் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். புதுச்சேரியில் சொகுசு கார் பதிவிற்காக போலியான முகவரி சான்று கொடுத்து கேரள அரசுக்கு இதன்மூலம் பல லட்சம் வரி ஏய்ப்பு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.



    இதுதொடர்பாக நடிகை அமலாபால், நடிகர்கள் சுரேஷ்கோபி எம்.பி, பகத் பாசில் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமலாபால் உள்பட 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராக கோரி குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவுபடி சுரேஷ்கோபியும், பகத்பாசிலும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    ஆனால் அமலாபால் மட்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் அமலாபால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 15-ந் தேதி நடிகை அமலாபால் குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டனர். மேலும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.


    Next Story
    ×